2014-01-20 16:14:21

கடவுள் விரும்புவதையல்ல, நாம் விரும்புவதையே ஆற்றுவது என்பது சிலைவழிபாட்டையொத்த பாவம்


சன.20,2014. கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் நற்செய்தி வழங்கும் புதிய கூறுகளையும் கடவுள் தரும் ஆச்சரியங்களையும் ஏற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் காலை, தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிரூட்டமும் செயல்பாட்டுத்தன்மையுமுடைய இறைவார்த்தையை ஏற்றுக்கொள்ள நாம் திறந்த மனம் கொண்டவர்களாகச் செயல்படவேண்டியது அவசியம் என்றார்.
நாம் விரும்புவதையோ, நாம் எதிர்பார்ப்பதையோ சொல்வதல்ல இறைவார்த்தை, மாறாக இறைவன் நம்மிடம் சொல்ல விரும்புவதே இறைவார்த்தை எனும் நற்செய்தி என்றுரைத்தத் திருத்தந்தை, நம் ஆண்டவர் ஆச்சரியங்களின் ஆண்டவர் எனவும் எடுத்துரைத்தார்.
இறைவனின் வார்த்தை எது என்பதையும், நம் விருப்பத்திற்கு ஏற்ப நாம் நம்புகிறோமா அல்லது அவரின் உண்மையான வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படிகிறோமா என்பதையும் சிந்திக்கவேண்டிய நேரமிது எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
புதிய திராட்சை தோல் பையில் புதிய இரசத்தை ஊற்றுவது, பழைய துணியில் புதிய துணி கொண்டு ஒட்டுப்போடுவது என இயேசு எடுத்துரைத்த எடுத்துக்காட்டுக்களையும் எடுத்தியம்பி, தன் மறையுரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுள் விரும்புவதையல்ல, மாறாக நாம் விரும்புவதையே ஆற்றுவது என்பது சிலைவழிபாட்டையொத்த பாவம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ விடுதலை மற்றும் கிறிஸ்தவ கீழ்ப்படிதல் குறித்து நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.