2014-01-18 15:22:32

புனிதரும் மனிதரே - பறவைகளின் பசி தீர்த்த பாமரர்


ஸ்பெயின் நாட்டில், செல்வந்தர் ஒருவரின் நிலத்தில் கூலிவேலை செய்தவர் இசிதோர். மிக வறியச் சூழலில் வாழ்ந்தாலும், பசித்தோரைக் கண்டால், அவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அவர்கள் பசியை ஏதாவது ஒரு வகையில் தீர்ப்பது இசிதோரின் வழக்கம்.
கடும் குளிர் காலத்தில் ஒரு நாள், மாவரைக்கும் ஓர் இடத்திற்கு, தானிய மூட்டை ஒன்றைச் சுமந்து சென்றார் இசிதோர். போகும் வழியில், பனியால் உறைந்திருந்த நிலத்தில் தானியங்களைத் தேடி கொத்திக் கொண்டிருந்த பறவைகளைக் கண்டார். தான் சுமந்து சென்ற மூட்டையிலிருந்து பாதி அளவு தானியங்களை அங்கு கொட்டினார் இசிதோர். இதைக் கண்ட மற்றவர்கள், அவரைக் கேலி செய்தனர். ஆனால், பறவைகளோ வயிறார உண்டன.
மாவரைக்கும் இடத்திற்கு இசிதோர் சென்றடைந்தபோது, அவரது மூட்டையில் தானியங்கள் சற்றும் குறையாமல் நிறைந்திருந்தது. அது மட்டுமல்ல, அந்த தானியங்கள் அரைபட்டபின் கிடைத்த மாவு, இருமடங்காக இருந்தது.
12ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித இசிதோர், உழவர்களின் காவலர் என்று கொண்டாடப்படுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.