2014-01-18 15:20:09

திருத்தந்தை பிரான்சிஸ் : ஊடகத்துறையினர், உயர்வான நன்னெறி விழுமியங்களைக் காக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளனர்


சன.18,2014. வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பணியாளர்கள் தகவல் வழங்குபவர்கள் மற்றும் பொதுநலனுக்குப் பணிபுரிபவர்கள் என்பதால், இவர்கள் உயர்வான நன்னெறி விழுமியங்களைக் காக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளனர் என திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
RAI எனப்படும் இத்தாலிய அரசின் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் பணியாளர்கள், இன்னும் இவற்றோடு தொடர்புடைய ஏறக்குறைய எட்டாயிரம் பேரை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்த ஊடகங்கள் ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில் ஆற்றியுள்ள சிறப்பான பணிகளைக் கோடிட்டுக் காட்டினார்.
RAI வானொலி ஆரம்பிக்கப்பட்டதன் 90ம் ஆண்டு, RAI தொலைக்காட்சி தொடங்கப்பட்டதன் 60ம் ஆண்டு ஆகிய இரு நிகழ்வுகளையொட்டி இச்சந்திப்பு இடம்பெறுகின்றது என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, பல ஆண்டுகளாக RAI ஊடகங்களுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் உறவுகள் பற்றியும் பேசினார்.
RAI ஊடகங்கள், வத்திக்கான் வானொலி, வத்திக்கான் தொலைக்காட்சி ஆகியவற்றுடன் இணைந்து திருஅவையில் நடைபெறும் நிகழ்வுகளைப் பொதுமக்களுக்கு வழங்கிவருவதைப் பாராட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஊடகத்துறையினர் நன்னெறிக் கூறுகளைக் காக்க வேண்டுமென்றும், மனித முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.