2014-01-17 15:43:26

பாக்தாத் நகரில் அனைத்து மதத்தினருக்கும் கிறிஸ்தவ மருத்துவமனை


சன.17,2014. பாக்தாத் நகரில் எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைத்து மதத்தினருக்குமெனத் திறக்கப்பட்டுள்ள ஒரு கத்தோலிக்க மருத்துவமனையின் மூலம், தாங்கள் ஈராக்கின் உண்மையான குடிமக்கள் என்பதை கிறிஸ்தவர்கள் உணர்த்த விரும்புகின்றனர் என, அந்நாட்டின் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள் கூறினார்.
ஷியா முஸ்லிம் பிரிவினர் பெரும்பான்மையாக வாழ்கின்ற பாக்தாத் நகரின் கிழக்கே திறக்கப்பட்டுள்ள புனித வளன் மருத்துவமனை பற்றி ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், கிறிஸ்தவர்கள் அனைத்து மதத்தினர்மீதும், குறிப்பாக, இஸ்லாமியர்மீதும் கொண்டுள்ள நல்லுணர்வை முஸ்லிம் மதத் தலைவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர் எனக் கூறினார்.
ஈராக் கத்தோலிக்கத் திருஅவை எல்லா மதத்தினருக்கும் பணிபுரிவதில் திறந்த மனதாய் இருக்கின்றது என்பதை, இப்புதிய முயற்சியின்மூலம் காட்ட விரும்புகின்றது எனவும் முதுபெரும் தந்தை சாக்கோ தெரிவித்தார்.
மேலும், புனித வளன் மருத்துவமனை திறப்புவிழாவில் கலந்துகொண்ட முஸ்லிம் தலைவர்கள் கிறிஸ்தவர்களுக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்தனர் என ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.