2014-01-17 15:43:00

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்


சன.17,2014. இக்காலத்தில் பலர் கிறிஸ்தவ ஒன்றிப்பில் நம்பிக்கையில்லாதிருந்தாலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைகளில் நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டுமென ஃபின்லாந்து கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித ஹென்றியின் விழாவையொட்டி, ஃபின்லாந்து லூத்தரன் சபை பேராயர் Kari Makinen அவர்கள் தலைமையில் வந்த அந்நாட்டின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுவின் பத்துப் பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கிடையேயான உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டினார்.
கடவுள் பற்றியே பேசப்படாத சமூக மற்றும் கலாச்சாரச் சூழல்களில் நம் விசுவாசத்தை அறிக்கையிட வேண்டியிருக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் தம் மகனாகிய கிறிஸ்துவில் வெளிப்படுத்திய தமது அன்புக்குச் சான்றுகளாய் நாம் வாழ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
ஃபின்லாந்து நாட்டின் பாதுகாவலராகிய புனித ஹென்றியின் விழாவையொட்டி அந்நாட்டின் கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழு ஆண்டுதோறும் வத்திக்கானில் திருத்தந்தையைச் சந்திப்பது கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.