2014-01-17 15:43:17

திருத்தந்தை பிரான்சிஸ் : கடவுளின் பிள்ளைகளாய் இருக்கும் கொடையை கைவிடக் கூடாது


சன.17,2014. தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களாகிய கிறிஸ்தவர்கள், பிற நாடுகளைப்போல சாதாரணமானவர்களாக உணரும்பொருட்டு, தாங்கள் கடவுளின் குழந்தைகளாய் இருப்பதை விற்பதற்கு அடிக்கடி சோதிக்கப்படுகின்றனர், இவ்வாறு இறைவார்த்தையை மறந்து தங்களின் சொந்த ஆசைகளைப் பின்செல்லுகின்றனர் என்று எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, பிற நாடுகளைப் போன்று தங்களுக்கும் ஓர் அரசர் வேண்டும் என, யூத மக்கள் இறைமனிதர் சாமுவேலிடம் கேட்டது பற்றிக் கூறும் இந்நாளின் முதல் வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றியபோது இவ்வாறு எச்சரித்தார்.
இந்த மக்கள் அன்பின் ஆண்டவரையும், தாங்கள் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதையும் புறக்கணித்து உலகப்போக்கின் பாதையைத் தேடினர், இன்றும் பல கிறிஸ்தவர்கள் இவ்வாறே நட்க்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சோதனைகள் நம் இதயங்களைக் கடினப்படுத்துகின்றன, இதயம் கடினமாக, திறக்காமல் இருக்கும்போது இறைவார்த்தையால் அங்கே நுழைய முடியாது என்று விளக்கிய திருத்தந்தை, நம் இதயங்கள் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்ற உணர்விலிருந்து விலகிச்செல்லாதிருக்க, இறைவார்த்தையை வரவேற்போம் எனவும் கூறினார்.
நாம் விரும்பும் வழியில், விரும்புவதைச் செய்யத் தூண்டும் தன்னலத்தை வெற்றிகொள்ள ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.