2014-01-17 15:44:01

தமிழ்நாடு தொடக்கக் கல்வியில் பின்னடைவு, ஓர் ஆய்வு


சன.17,2014. தமிழ் நாட்டில் கிராமப்புறத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அவர்களில் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரைப் படிக்கும் மாணவர்களில் பாதிப்பேருக்குத்தான் தாய்மொழியில், முதல் வகுப்புப் பாடப் புத்தகங்களையே படிக்க முடிகிறது என்றும் ASER என்ற கல்வியின் தரம் குறித்த ஆண்டறிக்கை கூறுகிறது.
தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 26 ஆயிரம் மாணவர்களிடம் எடுத்த ஆய்வில், ஆறிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் 31 விழுக்காட்டினருக்கு மட்டுமே வகுத்தல் கணக்குத் தெரிந்திருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கல்விக்கான உரிமை என்ற சட்டத்தின் கீழ், பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாடங்களை முடிப்பதில் கவனம் செலுத்துவதைவிட, குழந்தைகள் கற்பதற்கான இலக்குகளை எட்ட ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
இதற்கிடையே, இந்த அறிக்கை முடிவுகள் சரியனவை அல்ல என்று கூறும் தமிழ் நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் டி.கண்ணன், கடந்த காலங்களைவிட இக்காலத்தில் தமிழ்நாட்டில் கல்வித்தரம் உயர்ந்தே இருக்கிறது, அரசுகளும் கல்வித்துறையில், கட்டமைப்பு வசதிகளைப் போதிய அளவு தந்திருக்கின்றன. ஆனால் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால் பல பிரச்சனைகள் உருவாகின்றன என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம் : The Hindu/BBC







All the contents on this site are copyrighted ©.