2014-01-16 16:12:26

மக்களுடன் நெருங்கி வரும் அற்புதக் கொடையை, திருத்தந்தை பெருமளவில் பெற்றுள்ளார் - இராபி Abraham Skorka


சன.16,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் மேற்கொள்ளவிருக்கும் பயணம் அங்குள்ள மக்களின் மனங்களைத் தொட்டு, ஓர் ஆன்மீக புத்துணர்வைக் கொணரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்று யூத மதத் தலைவர் ஒருவர் கூறினார்.
ஆர்ஜென்டீனாவின், Buenos Aires நகரில் அமைந்துள்ள இலத்தீன் அமெரிக்க யூத குருக்கள் பயிற்சி இல்லத்தின் தலைவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நெருங்கிய நண்பருமான இராபி Abraham Skorka அவர்கள், Avvenire என்ற இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
இராபி Skorka அவர்கள், இவ்வியாழனன்று உரோம் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில், கத்தோலிக்க, யூத மதங்களுக்கிடையே உள்ள உறவு குறித்து ஒரு கருத்தரங்கை தலைமையேற்று நடத்தினார்.
அவரது உரோம் நகர் பயணத்தின்போது, Avvenire என்ற இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மக்களுடன் நெருங்கி வரும் அற்புதக் கொடையை திருத்தந்தை பெருமளவில் பெற்றுள்ளார் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இராபி Skorka அவர்களும் இணைந்து, வானமும் வையமும் என்ற பொருள்படும் “El cielo y la terra” என்ற நூலை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : VIS / Zenit








All the contents on this site are copyrighted ©.