2014-01-16 16:08:31

புனிதர் நிலைக்கு பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளின் செலவுகளை திருஅவை குறைத்துள்ளது


சன.16,2014. புனிதர் நிலைக்குப் பரிந்துரைக்கப்படும் அனைவருமே சமமானவர்கள் என்பதால், அவர்களைப் புனிதர்களாக்கும் வழிமுறைகளில் செலவுகளைக் குறைக்கவும், அனைவருக்கும் சமமான மதிப்பளிக்கவும் புதிய சீர்திருத்தங்கள் திருஅவையில் இவ்வாண்டு துவக்கத்திலிருந்து புகுத்தப்பட்டுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
புனிதர்நிலை பரிந்துரை வழிமுறைகளுக்கென நிறுவப்பட்டுள்ள திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்செலொ அமாத்தோ அவர்கள், உர்பானியா பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் பகிர்ந்துகொண்ட இக்கருத்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் இச்செவ்வாயன்று வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் புனிதமான வாழ்வை மேற்கொண்ட பலரையும் புனித நிலைக்கு உயர்த்தும் வழிகளை அனைத்து நாடுகளும் சமமான நிலையில் பின்பற்றும் வகையில் இந்த வழிமுறைகள் விரைவில் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் என்று கர்தினால் அமாத்தோ அவர்கள் தெரிவித்தார்.
தற்போதைய வழக்கப்படி, புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் வழிமுறைகள் ஒரு சில ஆண்டுகளிலிருந்து, பல நூற்றாண்டுகள் வரை நீடிக்கிறது என்பதும், வருகிற ஏப்ரல் மாதம் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படவிருக்கும் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் வழிமுறையே மிகக் குறுகிய காலமான 9 ஆண்டுகள் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : L’OR / Reuters








All the contents on this site are copyrighted ©.