2014-01-16 16:02:34

திருத்தந்தை பிரான்சிஸ் : “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு என்று இயேசு கூறுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது


சன.16,2014. “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு” என்று இயேசு கூறுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் உயிர்ப்பு ஞாயிறுக்குப் பின்வரும் நல்லாயன் ஞாயிறு, இறை அழைத்தலுக்காக செபங்களை எழுப்பும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் இறை அழைத்தலுக்காக செபங்களை எழுப்பும் 51வது நாளுக்கென இவ்வியாழனன்று செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
"அறுவடை மிகுதி" என்று இயேசு குறிப்பிடுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்று தன் செய்தியைத் துவக்கும் திருத்தந்தை, உழுதல், பயிரிடுதல் போன்ற பணிகள் எதையும் குறிப்பிடாமல் அறுவடையைக் குறிப்பிடும் இயேசு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் என்றும், கிறிஸ்துவின் இந்தக் கூற்று, இவ்வுலகில் இறைவன் ஏற்கனவே அறுவடையை வழங்கியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது என்றும் விளக்குகிறார் திருத்தந்தை.
நான்கு பகுதிகளாக அமைந்துள்ள இச்செய்தியில், இறை அழைத்தல் என்பது கிறிஸ்துவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை குறிப்பிடுகிறார்.
நல்ல நிலங்களாக வாழ்வது என்பது இன்றைய காலக் கட்டத்தில் சவால்கள் நிறைந்த ஓர் அழைப்பு என்பதையும் சுட்டிக்காட்டும் திருத்தந்தை, இத்தகைய நிலங்களாக வாழ்வது உலகம் காட்டும் வழிகளிலிருந்து வேறுபட்டது என்று எடுத்துரைக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.