2014-01-16 16:10:22

ஐ.நா. பொதுஅவை, குழந்தைகள் உரிமைகள் குறித்து மேற்கொண்ட முயற்சிகளுக்கு திருப்பீடம் முழு ஆதரவு தந்தது - திருப்பீடப் பேச்சாளர் Lombardi


சன.16,2014. குழந்தைகளின் உரிமைகள் என்ற மையக்கருத்துடன் ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் அமர்வில், திருப்பீடத்திற்கு தரப்படும் அனைத்து பரிந்துரைகளையும் மனதார ஏற்பதற்கு திருஅவை தயாராக உள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இவ்வியாழன் துவங்கியுள்ள ஐ.நா. அமர்வில் திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொள்ளச் சென்றுள்ள பேராயர் சில்வானொ தொமாசி அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
குழந்தைகள் குறித்த உரிமைகள் என்பது சட்டப்பூர்வமாக்கப்படும் முயற்சிகளை ஐ.நா. பொது அவை, 1990ம் ஆண்டு, முன்வைத்தபோது, அந்த முயற்சிகளுக்கு திருப்பீடம் முழு ஆதரவு தந்தது என்பதை, திருப்பீடப் பேச்சாளர் அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் விளக்கிக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, குழந்தைகள் குறித்த இரு அறிக்கைகளை 1994ம் ஆண்டும், 2011ம் ஆண்டும் திருப்பீடம் வெளியிட்டுள்ளது என்றும் அருள் பணியாளர் Lombardi விளக்கிக் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டங்களிலும் குழந்தைகளுக்கு அவர் தரும் முக்கியத்துவத்தை உலகம் கண்கூடாகக் கண்டு வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அருள் பணியாளர் Lombardi அவர்கள், குழந்தைகளின் உரிமைகளைக் காப்பதில் திருஅவை எள்ளளவும் பின்வாங்காது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.