2014-01-16 16:10:47

Gaza நிலப்பகுதி மனிதர்கள் உருவாக்கிய ஒரு பெரும் அநீதி - கத்தோலிக்க ஆயர்கள்


சன.16,2014. இஸ்ரேல், பாலஸ்தீனம் இரண்டுக்கும் இடையே சிக்கியுள்ள Gaza நிலப்பகுதி மனிதர்கள் உருவாக்கிய ஒரு பெரும் அநீதி என்றும், இந்த அநீதிக்கு விரைவில் ஒரு தீர்வு காணப்படவேண்டும் என்றும் கத்தோலிக்க ஆயர்கள் குழுவொன்று அறிவித்துள்ளது.
சனவரி 11 கடந்த சனிக்கிழமை முதல் சனவரி 16, இவ்வியாழன் முடிய புனித பூமியில் நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பன்னாட்டு ஆயர்கள் இணைந்து, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
1998ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தில் வட அமேரிக்கா, கனடா, தென் ஆப்ரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய பகுதிகளிலிருந்து ஒரு சில ஆயர்கள் புனித பூமிக்குப் பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாண்டு இப்பயணத்தை மேற்கொண்ட 13 ஆயர்களின் குழு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், Gaza பகுதியைக் குறித்து தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கும் அதே நேரத்தில், அந்நிலப்பரப்பில் வாழும் எளிய மக்களிடையே தாங்கள் கண்ட நம்பிக்கையையும், ஒற்றுமையும் ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
இவ்விரு நாடுகளிலும் உள்ள அரசுத் தலைவர்கள், மக்களின் நம்பிக்கையை குலைக்கும் தடைகளாக இல்லாமல், அதை வளர்க்கும் கருவிகளாக இருக்கவேண்டும் என்ற தங்கள் ஆவலை ஆயர்கள் இந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.