2014-01-15 15:10:25

புனிதரும் மனிதரே:புனித முதலாம் மர்செலுஸ், திருத்தந்தை(308-309)


பொது நெடுஞ்சாலை ஒன்றில் அடிமையாக வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டவர். குதிரைகளைப் பராமரிக்கும் வேலைக்கு அனுப்பப்பட்டவர். நாடு கடத்தப்பட்டவர் புனித மர்செலுஸ். இக்கடினமான வேலையின்போதே இவர் இறந்தார் எனச் சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் அரசியல் செல்வாக்குமிக்க சமய எதிர்ப்பாளர்கள். உரோம் பேரரசர் தியோக்ளேசியன் கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகளை நடத்தி முடித்திருந்த காலத்தில் திருத்தந்தையாகப் பணியைத் தொடங்கியவர் புனித முதலாம் மர்செலுஸ்(Marcellus I). அச்சமயத்தில் உரோம் திருஅவை மிகுந்த குழப்பத்தில் இருந்தது. உரோமையில் மக்கள் கூடும் இடங்களும், இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. பேரரசரின் நீண்ட கால அடக்குமுறைகளில் உயிருக்குப் பயந்து கிறிஸ்தவத்தைவிட்டு விலகியிருந்த மக்களை மீண்டும் திருஅவைக்குள் சேர்ப்பதற்கு இவர் கடுமையாய் உழைக்க வேண்டியிருந்தது. இப்படி பெரும் சவால்களை இவர் எதிர்கொண்டவேளை, லாப்சி எனப்படும் சமய எதிர்ப்பாளர்கள், எந்தவிதத் தபச் செயலுமின்றி திருஅவைக்குள் மீண்டும் மக்கள் சேர்க்கப்பட வேண்டுமென்று வன்முறையைக் கையில் எடுத்தனர். இரத்தம் சிந்தும் கடும் மோதல்கள் இடம்பெற்றன. திருஅவையைச் சீர்படுத்த திருத்தந்தை மர்செலுஸ் எடுத்த முயற்சிகளை வெறுத்த பேரரசர் Maxentius இத்திருத்தந்தையை நாடு கடத்தி துன்புறுத்தினார். ஓராண்டுகூட திருத்தந்தையாகப் பணியாற்ற இயலாமல் இருந்த புனித முதலாம் மர்செலுஸ் அவர்களின் திருவிழா சனவரி 16.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.