2014-01-14 15:14:21

விவிலியத் தேடல் காணாமற்போனவை பற்றிய உவமைகள் பகுதி-9


RealAudioMP3 இஸ்ரயேல் மக்கள் சமுதாயத்திலிருந்து காணாமற்போனவர்கள் இடையர்கள் என்ற கோணத்தில் சென்ற விவிலியத் தேடலில் நம் சிந்தனைகள் அமைந்தன. மக்கள் கணக்கெடுப்பில் சேரும் தகுதி கூட இல்லாமல், மந்தையோடு மந்தையாக இடையர்கள் ஊருக்கு வெளியே தங்கள் ஆடுகளோடு தங்கியிருந்தனர். அவர்கள் மத்தியில் வான தூதர் ஒருவர் தோன்றி அவர்களுக்கு வழங்கியச் செய்தி இவ்வாறு ஒலித்தது:
லூக்கா நற்செய்தி 2: 10-12
அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்

'மெசியா என்னும் மீட்பர்' மிருகங்கள் அடையும் ஒரு தொழுவத்தில் பிறந்துள்ளார் என்ற ஒரு செய்தி நமக்குக் கிடைத்தால், அதை நாம் நம்புவோமா என்பது சந்தேகம்தான். மிருகங்கள் தங்கும் ஓர் இடத்தில், குழந்தையொன்று பிறந்துள்ளது என்பது நம்பக்கூடிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய செய்திதான். வறுமைப்பட்ட பல நாடுகளில், வயல்வெளிகளில், கட்டடம் கட்டும் இடங்களில், தொழிற்சாலைகளில், பேருந்துகளில் குழந்தைகள் பிறக்கும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. அண்மைய ஆண்டுகளில், போர்ச் சூழல் நிறைந்துள்ள நாடுகளில் அகதிகள் முகாம்களில் குழந்தைகள் பிறக்கும் செய்திகள் இன்று அதிகரித்துள்ளன. அகதிகளைப் போல, ஊர்விட்டு ஊர் வந்து சேர்ந்த யோசேப்பு, மரியா என்ற இளம் தம்பதியரின் குழந்தை ஒரு தொழுவத்தில் பிறந்தது. ஏழ்மையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கியிருந்த இஸ்ரயேல் நாட்டில், மிருகங்கள் தங்கும் தொழுவத்தில் குழந்தையொன்று பிறந்துள்ளது என்பது கேட்பதற்கு அதிர்ச்சியைத் தந்தாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய செய்தியாக இருந்தது.
ஆனால், மிருகங்கள் நடுவே பிறந்திருந்த அந்தக் குழந்தைதான் இஸ்ரயேல் மக்கள் இத்தனை நூற்றாண்டுகளாக எதிர்பார்த்து, காத்திருந்த 'மெசியா' என்பது நம்பமுடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத செய்தி. ஆனால், வானதூதர் சொன்ன இச்செய்தியில் இறுதி வாக்கியம் அழுத்தந்திருத்தமாக ஒலித்தது. "இதுவே உங்களுக்கு அடையாளம்". அதாவது, மிருகங்கள் மட்டுமே தங்குவதற்கு ஏற்ற இடம் என்று மனிதர்களால் கருதப்படும் இடத்தில் 'மெசியா' பிறந்து, கிடத்தப்பட்டுள்ளார் என்பது மட்டுமே இடையர்களுக்குத் தரப்பட்ட அடையாளம்.

வேறு யாருக்கும் இந்த அடையாளம் தரப்பட்டிருந்தால், அவர்கள் அதை நம்பியிருக்க மாட்டார்கள். அத்தகையச் சூழலில் பிறந்த குழந்தையைத் தேடிச் சென்றிருக்க மாட்டார்கள். ஆனால், இடையர்கள் இச்செய்தியை முழுமையாக நம்பினார்கள்.
ஆடுகள் மத்தியிலேயே உண்டு, உறங்கி, தங்கள் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தவர்கள் இடையர்கள். ஆட்டுக்கிடையில் பிறந்த அனுபவமும் அவர்களில் ஒரு சிலருக்கு இருந்திருக்கலாம். எனவே, ஆடு, மாடுகள் மத்தியில் தங்கள் மீட்பரான 'மெசியாவும்' பிறந்துள்ளார் என்ற செய்தியை அவர்களால் நம்ப முடிந்தது, ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது. கடவுள் நம்மோடு என்ற பொருள்படும் 'எம்மானுவேல்' என்ற அடைமொழியை இறைவன் முற்றிலும் நிறைவேற்றிவிட்டார் என்று அவர்களால் நம்ப முடிந்தது.

மிருகங்கள் தங்கிய ஒரு தொழுவத்தில் தான் பிறந்தோம் என்பதை இயேசுவும் தன் வாழ்வில் அடிக்கடி நினைவுகூர்ந்திருக்கவேண்டும். தன் பெற்றோருக்கு அடுத்ததாக, தன்னைக் கண்டவர்கள் இடையர்கள்; அதேபோல், தன் பெற்றோரின் முகங்களுக்கு அடுத்ததாக, தான் கண்ட முதல் மனிதர்கள் இடையர்கள் என்பதையும் இயேசு அவ்வப்போது எண்ணி மகிழ்ந்திருக்கவேண்டும். எனவே, அவர் இடையர்களுடன் ஆழமான ஓர் உறவை வளர்த்திருந்தார் என்பதை நாம் சந்தேகம் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ள முடியும். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இடையர்களைப் பற்றி, ஆயர்களைப் பற்றி அவர் பேசியது, இந்த ஆழமான உறவின் வெளிப்பாடே.

இடையர்களில் ஒருவரை, தன் முதல் உவமையின் நாயகனாக்கியதுபோல, தன் அடுத்த உவமையின் நாயகியாக ஒரு பெண்ணை முன் நிறுத்துகிறார் இயேசு. 'விவிலியத்தில் பெண்கள்' என்ற தலைப்பில் ஆய்வாளர்கள் சொல்லும் கருத்துக்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. அவற்றில் ஒரு சில கருத்துக்கள் இதோ:


இத்தகையதொரு பின்னணியில், இயேசு கூறும் இந்த உவமை இன்னும் சில தெளிவுகளைத் தருகின்றது. 'பத்து திராக்மாக்கள் வைத்திருந்த ஒரு பெண்'ணை இயேசு தன் இரண்டாவது உவமையில் குறிப்பிடுகிறார். இந்த ஆரம்ப வார்த்தைகள், இரு எண்ணங்களை மனதில் பதிக்கின்றன. அந்தப் பெண் தனியாக வாழ்ந்தவர் என்ற எண்ணம் முதலில் மனதில் எழுகிறது. தனியாக வாழும் நிலையில் இருந்த பெண்கள் பொதுவாக கைம்பெண்களாக இருந்திருக்கவேண்டும். இது முதல் எண்ணம். அந்தப் பெண்ணிடம் பத்து திராக்மாக்கள் இருந்தன என்று இயேசு குறிப்பிடுகிறார். ஒரு திராக்மா என்பது தொழிலாளியின் ஒரு நாள் கூலிக்குச் சமமான தொகை. திராக்மாவைக் குறிப்பிட்டு இயேசு பேசுவதால், அப்பெண் கூலித் தொழில் செய்தவர் என்பதையும் இயேசு மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார். இது இரண்டாவது எண்ணம்.
இடையர்கள் இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து காணாமற்போனவர்களாக இருந்ததுபோல, கூலித்தொழில் செய்யும் ஒரு கைம்பெண்ணும் இஸ்ரயேல் சமுதாயத்தில் காணாமற்போனவர்தான்.

இயேசு கூறிய 3வது உவமை... காணாமற்போன மகன் உவமை. இந்த உவமையில், தந்தை ஒருவர், இரு மகன்கள் என்ற மூவரைச் சுற்றி தன் கதையைப் புனைந்துள்ளார் இயேசு. அந்த குடும்பத்தில் அன்னை ஒருவர் இருந்ததாகக் கூறப்படவில்லை. அன்னை இருந்திருந்தால், இளைய மகன் சொத்தில் பங்கு கேட்கும் இக்கட்டான, துயரமான நிகழ்வில், அவர் கட்டாயம் இடைமறித்து இளையவருக்கு புத்தி சொல்லியிருப்பார். எனவே, இயேசு தன் உவமையில் குறிப்பிட்டுள்ள தந்தை, மனைவியை இழந்தவர் என்ற கோணத்தில் நாம் சிந்தித்துப் பார்க்கலாம். சொத்தில் பங்குகேட்கும் அளவுக்கு இளைய மகன் வளர்ந்துவிட்டார் என்று இயேசு கூறுவதையும் இணைத்துச் சிந்தித்தால், மனைவியை இழந்து, வயதில் முதிர்ந்து, தளர்ந்திருந்த ஒரு தந்தையை நாம் இந்த உவமையில் சந்திக்கிறோம்.

இயேசு கூறிய இந்த மூன்று உவமைகளில், இடையர், பெண், வயதாகி, தனிமையில் இருக்கும் தந்தை என்ற இந்த மூவரும் பல வழிகளில் இஸ்ரயேல் சமுதாயத்தால் ஓரம் கட்டப்பட்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். தங்கள் வாழ்வில் எதையோ இழந்ததைப்போல, தொலைத்துவிட்டதைப்போல ஒவ்வொரு நாளும் உணர்ந்து வந்த இவர்கள், மீண்டும் ஓர் இழப்பைச் சந்திக்கின்றனர்.

இந்த இழப்புக்களையும் இயேசு அழகாக வரிசைப்படுத்தியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். ஓர் ஆடு, ஒரு திராக்மா, இளைய மகன் என்ற வரிசையில் அவர் கூறுவது, இழப்பின் தீவிரத்தைப் படிப்படியாகக் கூட்டுகிறது. நூறு ஆடுகள் மத்தியில் ஓர் அட்டை இழப்பது, இழப்புதான்... ஆனால், கூலி வேலை செய்யும் ஒரு கைம்பெண் பத்து திராக்மாக்களில் ஒரு திராக்மாவை இழப்பது, ஒருநாள் வாழ்வுக்குரிய ஆதாரத்தை இழப்பது போன்றது. அந்த இழப்பு நூறு ஆடுகளில் ஒன்றை இழப்பதைவிட அதிகத் துயர்தரும் இழப்பு. ஆடு, திராக்மா என்ற இந்த இரு இழப்புக்களை விட, தன் மகனை இழப்பது மிக அதிகத் துயர்தரும் ஓர் இழப்பு.
இந்த இழப்புக்களை எவ்விதம் அவர்கள் எதிர்கொண்டனர் என்பதையும், இந்த இழப்புக்களை மீண்டும் பெறும் மகிழ்வுடன் இறைவனை இயேசு எவ்வகையில் தொடர்பு படுத்துகிறார் என்பதையும் நமது அடுத்தத் தேடலில் சிந்திக்க முயல்வோம்.








All the contents on this site are copyrighted ©.