2014-01-14 15:19:57

முதல் உலகப் போர் வீரர்களின் தினசரிக் குறிப்புகள் இணையத்தில்


சன.14,2014. முதலாம் உலகப்போரின்போது அப்போரில் ஈடுபட்ட பிரித்தானிய இராணுவ வீரர்கள் போரின்போது எழுதிய தினசரிக் குறிப்புகளில், 15 இலட்சம் பக்கங்களுக்கு மேற்பட்ட 3 இலட்சம் டிஜிட்டல் தினசரிக் குறிப்புகள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன.
முதலாம் உலகப்போரின் நூற்றாண்டைக் குறிக்கும் விதமாக, இத்தினசரிக் குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கத் திட்டமிடப்பட்டது.
1914ம் ஆண்டு ஜூலை 28 முதல் 1918ம் ஆண்டு நவம்பர் 11 வரை இடம்பெற்ற முதல் உலகப்போரில் 8 இலட்சத்துக்கு மேற்பட்ட படைவீரர்கள் கொல்லப்பட்டனர். 2 கோடியே 20 இலட்சம் பேர் காயமடைந்தனர்.
1914ம் ஆண்டில் முதலாம் உலகப் போர் தொடங்கியதிலிருந்து பிரான்சின் ப்ளாண்டர்ஸிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறியது வரையிலான காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி பிரித்தானிய இராணுவப் பிரிவுகள் அதிகார பூர்வமான தினசரிக் குறிப்புகளில் எழுதி வைத்திருந்தன.
மொத்தம் ஏறக்குறைய 15 இலட்சம் தினசரிக் குறிப்புப் பக்கங்கள் தேசிய ஆவணக்காப்பகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஐந்தில் ஒரு பங்கு பக்கங்கள் இதுவரை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்த டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்ட 1944 தினசரிக் குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், பிரிட்டன் போரில் முதலில் பயன்படுத்திய முன்று குதிரைப்படை மற்றும் ஏழு காலாட்படைப் பிரிவுகளில் அனுபவங்களை விளக்குகின்றன.
இராணுவத் தளபதி CJ Paterson, தனது குறிப்பு ஒன்றில், போரின்போது தான் கண்ட காட்சிகள் "விவரிக்க முடியாதவை" என்றும், "பதுங்கு குழிகள்,பொருட்கள், இரத்தக்கறை தோய்ந்த ஆடைகளின் பகுதிகள், வெடி மருந்துகள், கருவிகள், தொப்பிகள், மேலும் பிற பொருட்கள் தாறுமாறாக சிதறிக்கிடக்கின்றன, எல்லாத்திசைகளிலும் மனித உடல்கள், அவைகளில் சில நமது ஆட்கள்" என்றும் விவரித்திருந்தார்.
இந்தக் குறிப்பை எழுதிய ஆறு வாரங்களில் அவரும் கொல்லப்பட்டார்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.