2014-01-14 15:18:24

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் அமெரிக்க அரசு இராணுவக் கொள்கையை அதிக அளவில் திணிக்கின்றது, அமெரிக்க ஆயர்கள் குறை


சன.14,2014. மெக்சிகோவில் போதைப்பொருளைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு தனது இராணுவக் கொள்கையை அதிக அளவில் திணிக்கின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவையின் இரு பணிக்குழுக்கள் குறை கூறியுள்ளன.
போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைக்கென நிதி ஒதுக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், மனித உரிமைகளைப் பாதுகாத்து, குடிமக்கள் சமுதாயத்தை வலுப்படுத்தி, மனிதாபிமான மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்களை உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என, அப்பணிக்குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்க ஆயர்கள் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழு, அனைத்துலக நீதி மற்றும் அமைதிப் பணிக்குழு ஆகிய இரண்டின் தலைவர்கள் இணைந்து அந்நாட்டு அரசுச் செயலர் ஜான் கெரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அரசின் நிதி ஒதுக்கீட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய விவகாரங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மெக்சிகோவும், அமெரிக்க ஐக்கிய நாடும் இணைந்து செய்யும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்யுமாறு அப்பணிக்குழுக்களின் தலைவர்களான மியாமி பேராயர் Thomas Wenski ம், Des Moines ஆயர் Richard Patesம் கேட்டுள்ளனர்.
இதற்கிடையே, இவ்விரு நாடுகளின் எல்லையில் இடம்பெறும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைக் கண்காணிப்பதற்கு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட Robotகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.