2014-01-14 15:14:15

புனிதரும் மனிதரே இறுதி ஊர்வலம் தந்த உறுதி


3ம் நூற்றாண்டில், எகிப்தில் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் தந்தை இறந்தபின், அண்ணன், தம்பி இருவருக்கிடையே சொத்து பிரிப்பதில் சண்டை எழுந்தது. அண்ணன் பீட்டர், சொத்தில் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டார். தம்பி பவுல், சொத்தில் சமமான பங்கு கேட்டு சண்டையிட்டார். அண்ணன் அவரிடம், "உனக்கு மிகவும் இளவயது. எனவே நீ சொத்தை வீணாக்கிவிடுவாய். நீ வயதில் முதிர்ச்சி பெறும்வரை சொத்தை நான் பாதுகாக்கிறேன்" என்று கூறினார்.
தங்கள் வழக்கைத் தீர்க்க அவர்கள் இருவரும் நகரத் தலைவரிடம் சென்றனர். போகும் வழியில், ஓர் இறுதி ஊர்வலம் அவர்களுக்கு எதிரே வந்தது. அந்த இறுதி ஊர்வலம் யாருக்கு நடக்கிறது என்று தம்பி பவுல் கூட்டத்தில் ஒருவரிடம் கேட்டார்.
இறந்தவர் நகரத்திலேயே பெரும் செல்வந்தர் என்றும், இத்தனை சொத்துக்கும் உரிமையாளர், இன்று தான் உடுத்தியிருந்த துணியோடு மட்டும் கல்லறைக்குச் செல்கிறார் என்றும் ஊர்வலத்தில் சென்ற ஒருவர் கூறினார்.
அவர் சொன்ன சொற்கள், இளையவர் பவுல் மனதில் ஆழமான தாக்கத்தை உருவாக்கின. பவுல், ஒரு தீர்மானம் கொண்டவராய், அண்ணனிடம், "அண்ணா, வாருங்கள் வீட்டுக்குச் செல்வோம். உங்களிடம் சொத்தில் நான் இனி பங்கு கேட்கமாட்டேன். இன்னும் சொல்லப்போனால், எனக்கு இந்த சொத்து எதுவும் வேண்டாம்" என்று கூறினார்.
இளையவர் பவுல் கூறியதுபோலவே, தன் உடைமை அனைத்தையும் அண்ணனிடம் கொடுத்துவிட்டு, ஒரு காட்டுப் பகுதியில் யாரும் அறியாத ஓர் இடத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கடும் தவம் மேற்கொண்டார். அங்கு அவரை இறைவன் பல வழிகளில் காத்துவந்ததாக பல கதைகள் உண்டு. காட்டில் அவர் வாழ்ந்த குகையிலேயே ஒரு புனிதராக உயிர் துறந்தார்.
கத்தோலிக்கத் திருஅவை, இவரை, புனித வனத்துச் சின்னப்பர் என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கிறது. இவரது திருநாள் சனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.