2014-01-14 15:18:10

திருத்தந்தை பிரான்சிஸ்: கர்தினால்களின் பணி திருஅவைக்குத் தொண்டுபுரிவதாகும்


சன.14,2014. திருஅவையில் கர்தினாலாக உயர்த்தப்படுவது, ஓர் அலங்கரிப்பு அல்ல, மாறாக, திருஅவைக்குத் தொண்டுபுரிவதற்காக வழங்கப்படும் ஒரு பணிஉயர்வு என, திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
சனவரி 12, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த 19 புதிய கர்தினால்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நம் ஆண்டவர் இயேசுவின் குணநலன்களையும் உணர்வுகளையும் அணிந்துகொண்டு உரோம் திருஅவையுடன் இணைந்து அகிலத் திருஅவைக்குத் தான் ஆற்றும் பணிகளில் தனக்கு இந்தப் புதிய கர்தினால்கள் உதவுவார்கள் என்று தான் நம்புவதாகவும் அக்கடிதத்தில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையில் கர்தினால்களின் பணியை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், கர்தினால்களாக அறிவிக்கப்பட்டிருப்பது, ஒரு பதவி உயர்வோ, ஒரு கவுரவமோ அல்லது அணிசெய்வதாகவோ இல்லை, மாறாக, இது பணி செய்வதற்கு அவர்களின் கண்ணோட்டத்தையும், இதயங்களையும் விரிவுபடுத்துவதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள Twitter செய்தியில், நாம் எப்பொழுதும், கடவுளே, உமக்கு நன்றி எனச் சொல்வோம், சிறப்பாக, அவரது பொறுமைக்கும் கருணைக்கும் நன்றி சொல்வோம் என எழுதியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.