2014-01-14 15:18:49

தமிழக மலைக் கிராமங்களில் 80 விழுக்காட்டுக் குழந்தைத் திருமணங்கள்


சன.14,2014. தமிழக மலைக் கிராமங்களில், 80 விழுக்காட்டுக் திருமணம், குழந்தைத் திருமணங்களாக நடக்கும் அதிர்ச்சி தகவல், மலைக் கிராம குழந்தைத் தொழிலாளர் பள்ளி மாணவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அம்மக்கள் வாழும் ஊர்களிலேயே, மேல்நிலைப்பள்ளிப் படிப்பை படிக்க வழி இல்லாதது, போதிய மருத்துவ வசதிகளை அரசு செய்து தராதது போன்றவை, இதற்கு முக்கிய காரணங்கள் என அந்த ஆய்வின் மூலம் மேலும் தெரியவந்துள்ளது.
தமிழக மலைக் கிராமங்களில், 80 விழுக்காட்டுக் திருமணங்கள், குழந்தை திருமணங்களாக நடந்து வருகின்றன.
தமிழகத்தின், பர்கூர் மலைக் கிராமமான ஜீயன்தொட்டி கொங்கடையில் 93 குடும்பங்களில் 432 பேர் உள்ளனர். இவர்களில் திருமணமானவர்கள் 257 பேர். இவர்களில் 18 வயதை அடையும்முன் திருமணம் செய்தவர்கள் 206 பேர். இதன்படி 80 விழுக்காட்டுத் திருமணங்கள், குழந்தைத் திருமணங்களாக நடந்துள்ளன.
மேலும், உலக அளவில் இடம்பெறும் குழந்தைத் திருமணங்களில் 45 விழுக்காடு, இந்தியாவில் நடப்பதாக ஐ.நாவின் குழந்தை நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.