2014-01-13 16:47:28

திருப்பீடத்திற்கான பல நாடுகளின் தூதர்களுக்கு திருத்தந்தையின் உரை


சன.13,2014. அண்மைக் காலங்களில் தென்சூடானுடன் ஏற்படுத்தப்பட்ட அரசியல் உறவு, கேப் வெர்தே, ஹங்கேரி, சாட் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்ட சிறப்பு ஒப்பந்தங்கள், Equatorial Guinea நாட்டுடனான ஒப்பந்த மறுசீரமைப்பு, மத்திய அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் பார்வையாளர் தகுதி போன்றவை, திருப்பீடம் உலக நாடுகளுடன் கொண்டுள்ள உறவின் வளர்ச்சியைக் காண்பிக்கிறது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்திற்கான உலக நாடுகளின் தூதரக அதிகாரிகளை இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், குடும்பங்களுக்கு ஆதரவளித்து, உதவி அவைகளைப் பலப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
முதியோர் சுமையாகக் கருதப்படுவதும், இளையோர் சரியான நோக்கமின்றி திரிவதும் மனிதகுல நம்பிக்கைகளைச் சிதைக்கின்றன என்பதையும் கவலையுடன் வெளியிட்டார் திருத்தந்தை.
அமைதியை உருவாக்குபவர்களாகவும், மகிழ்வை வழங்குபவர்களாகவும் இருக்கவேண்டிய மனிதர்கள், சுயநலவாதிகளாகச் செயல்படுவதால் மனிதகுலம் அனுபவிக்கும் துன்பங்களையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், சிரியா போன்ற நாடுகளில் இடம்பெறும் வன்முறை மோதல்கள் இவ்வாண்டில் முடிவுக்கு வந்து அமைதி நிலவும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
கொரியத் தீபகற்பத்தில் ஒப்புரவு எனும் கொடையை இறைவன் வழங்கவேண்டும் என வேண்டுவதாகவும் தன் உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தற்போது 180 நாடுகள் வத்திக்கானுடன் முழு அரசியல் உறவைக் கொண்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.