2014-01-13 16:51:53

திருத்தந்தை பிரான்சிஸ் - ஒவ்வொரு குழந்தையும், மகிழ்வு மற்றும் நம்பிக்கையின் கொடை


சன.13,2014. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழங்கவல்ல மிகச் சிறந்த பாரம்பரியச் சொத்து, விசுவாசமேயாகும் என்று உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவை முன்னிட்டு, வத்திக்கானில் 32 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அருளடையாளத்தை வழங்கியத் திருப்பலியில் மறையுரையாற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசம் எனும் பாரம்பரியச் சொத்தை குழந்தைகளுக்கு வழங்கவேண்டியது பெற்றோரின் கடமை என்பதை வலியுறுத்தியதுடன், ஒவ்வொரு குழந்தையும், மகிழ்வு மற்றும் நம்பிக்கையின் கொடை என்பதையும் எடுத்துரைத்தார்.
பண்டையக் கால இறையியல் அறிஞர்களின் கூற்றை மேற்கோள் காட்டியத் திருத்தந்தை, இயேசுவுக்கு திருமுழுக்குத் தேவையில்லையெனினும், தன் தெய்வீக உடலில் திருமுழுக்குத் தண்ணீரைப் பெற்றதன் வழியாக, அவர் தண்ணீருக்குத் திருமுழுக்கு வழங்கும் சக்தியை வழங்கினார் என்று கூறினார்.
திருமுழுக்கு வழங்கும்படி, இயேசு கிறிஸ்து, விண்ணகத்திற்கு எழும்பிச் செல்லும் முன் கூறிய வார்த்தைகள், ஒரு முடிவற்றச் சங்கிலிபோல் தலைமுறை, தலைமுறையாகத் தொடர்வதுபோல், நம் பிள்ளைகள் வழியாகவும் அது தொடரவேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.