2014-01-11 15:19:48

ஆண்டவரின் திருமுழுக்குத் திருநாள் - ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 தந்தை-மகன் உறவைக் கூறும் பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். அவற்றில் என் மனதில் ஆழமாய் பதிந்த ஒரு கதை இது. டீன்ஏஜ் இளைஞன் ஒருவன் தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தான். இருவரிடையிலும் மிக ஆழமான, அழகான உறவு இருந்தது. இளைஞன் கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவன். ஆனால், அவன் உடல் அந்த விளையாட்டிற்கு ஏற்றதுபோல் வலுமிக்கதாய் இல்லை. இருந்தாலும் அவனுக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு, பயிற்சியாளர் கல்லூரி கால்பந்தாட்டக் குழுவில் ஓர் இடம் கொடுத்தார். பல போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக்கள் அவனுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவன் ஓரத்திலிருந்து தன் குழுவினரை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பான். தன் மகன் களமிறங்கி விளையாடவில்லையெனினும், அவனது குழு விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அவன் தந்தை வருவார். உற்சாகமாய் கைதட்டி இரசிப்பார்.
ஈராண்டுகள் இப்படியே உருண்டோடின. முக்கியமான ஒரு போட்டி நெருங்கி வந்ததால், குழுவினர் அனைவரும் வெறியுடன் பயிற்சி பெற்று வந்தனர், இந்த இளைஞனையும் சேர்த்து. போட்டிக்கு முந்தின நாள், இளைஞனின் தந்தை இறந்துவிட்ட செய்தி வந்தது. பயிற்சியாளர் இளைஞனை ஆதரவாய் அணைத்து, ஆறுதல் சொல்லி, வீட்டுக்கு அனுப்பிவைத்தார். போட்டியைப்பற்றிக் கவலைப்பட வேண்டாமென்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அடுத்த நாள், முக்கியமான அந்த போட்டியில், இளைஞனின் குழு சரிவர விளையாடவில்லை. எனவே, தோற்கும் நிலையில் இருந்தனர். விளையாட்டின் பாதி நேர இடைவேளையின்போது அந்த இளைஞன் திரும்பிவருவதை, குழுவினர் பார்த்தனர். அதுவும், குழுவின் சீருடை அணிந்து விளையாட வந்திருந்தான் அவன். கால்பந்தாட்டத்தின் மீது அவனுக்கு இருந்த ஆர்வம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும், அதற்காக இப்படியா? தந்தையின் அடக்கம் முடிந்தும் முடியாமல், அவன் விளையாட்டுத்திடலுக்கு வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. அவனுக்கும், அவன் தந்தைக்கும் இருந்த நெருங்கிய உறவை அனைவரும் பார்த்திருந்தனர். எனவே, அவரைப் புதைத்த அன்றே அவன் விளையாட வந்திருந்ததை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
திடலுக்கு வந்த இளைஞன், பயிற்சியாளரிடம் சென்று, "சார் இந்த இரண்டாவது பாதியில் தயவுசெய்து என்னை விளையாட அனுமதியுங்கள்." என்று கெஞ்சினான். ஏற்கனவே தன் குழு தோற்றுக்கொண்டிருந்தச் சூழலில், இவனை விளையாட அனுமதித்தால், நிலைமை இன்னும் மோசமாகுமே என்று பயிற்சியாளர் பயந்தார். எனினும், அந்த இளைஞனின் மனதை உடைக்க விரும்பவில்லை. மேலும், கண்ணீர் நிறைந்திருந்த அந்த இளைஞனின் கண்களில் தெரிந்த ஆர்வம், பயிற்சியாளரை ஏதோ செய்தது. இனியும் இழப்பதற்கு என்ன இருக்கிறது, இந்த இளைஞனாவது மகிழ்வடையட்டுமே என்ற எண்ணத்தில், அனுமதி தந்தார்.
இரண்டாவது பாதியில், அந்த இளைஞனின் அற்புதமான விளையாட்டால், தோற்கும் நிலையில் இருந்த அவனது குழு வெற்றி அடைந்தது. அவனது குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சி; எதிரணிக்கும் அதிர்ச்சி. ஆட்டத்தின் முடிவில் அந்த இளைஞனைத் தோள்களில் சுமந்து ஆரவாரம் செய்தனர். ஆரவாரம் எல்லாம் ஓய்ந்தபின், பயிற்சியாளர் அவனிடம், "தம்பி, என்னால் இதை நம்பவே முடியவில்லை. உனக்கு என்ன ஆயிற்று? எங்கிருந்து வந்தது உன் பலம், திறமை எல்லாம்?" என்று நேரடியாகவே கேட்டார்.
இளைஞன் கண்ணீரோடு பேசினான்: "சார், என் அப்பா இறந்துவிட்டார் என்பது மட்டுமே உங்கள் அனைவருக்கும் தெரியும். அவருக்குப் பார்வைத் திறன் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். குழுவினரும், பயிற்சியாளரும் அதிர்ச்சியில் அவனைப் பார்த்தனர். இளைஞன் தொடர்ந்தான்: "ஆம், என் அப்பாவுக்குப் பார்வைத் திறன் கிடையாது. ஆனால், எனது குழுவின் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தவறாமல் வந்து என்னை உற்சாகப்படுத்தினார். இன்று, இந்த ஆட்டத்தைத்தான், முதன் முதலாக அவர் வானிலிருந்து கண்ணாரக் கண்டிருப்பார். அவர் பார்க்கிறார் என்பதற்காக, அவரை மகிழ்விக்க நான் என் முழு திறமையை இன்று வெளிப்படுத்தினேன்." என்று அவன் சொல்லி முடிக்கும்போது, அங்கிருந்தவர் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது... ஆனந்தக் கண்ணீர்.

புறக் கண்களால் பார்க்க முடியாத ஒரு தந்தை, தன் மகனை, அவனது கனவிலும், திறமைகளிலும் வளர்த்த கதை இது. புறக் கண்களால் மனிதர்கள் பார்க்க முடியாத விண்ணகத் தந்தை தன் மகன் இயேசுவின் கனவுகளைத் துவக்கிவைத்த ஒரு நிகழ்வை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. இயேசு திருமுழுக்கு பெற்றதும், தந்தை அவரை உலகிற்குப் பெருமையுடன் அறிமுகப்படுத்தினார்... “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (மத்தேயு 3: 17) என்று.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்திலும் மனிதக் குழந்தை வளர்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலமே அதிகமான காலம். உடலளவில் ஒரு குழந்தையின் வளர்ச்சியை பல்வேறு பருவங்களாக நாம் கொண்டாடுகிறோம். அதேபோல், உள்ளத்தளவில், அறிவுத் திறனில் அவர்கள் வளர்வதையும் நாம் பல வழிகளில் கொண்டாடுகிறோம், அங்கீகரிக்கிறோம். ஓர் இளைஞன் அல்லது இளம் பெண் தன்னையே ஆளும் திறமை பெறுவதை, பல கலாச்சாரங்களும் மதங்களும் சடங்குகள் வழியாகக் கொண்டாடுகின்றன. இனி இந்த இளைஞன் அல்லது இளம் பெண் இந்த உலகைத் தனியே சந்திக்கும் திறமை பெற்றுள்ளனர் என்று இக்கொண்டாட்டங்கள் வழியே நாம் பறைசாற்றுகிறோம்..

நமது மனித வளர்ச்சியின் படிகளை எண்ணிப்பார்க்க இந்த ஞாயிறு நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தருகிறது. அதிலும், நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த வாழ்வை நாமே நிர்ணயிக்கும் முக்கிய நிலையை எண்ணிப்பார்க்க இந்த ஞாயிறு ஒரு நல்ல தருணம். இயேசு யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்றதை இன்று நாம் கொண்டாடுகிறோம். தன் வாழ்வையும், பணியையும் குறித்து உறுதியானதொரு முடிவெடுத்த இயேசு, தன் முதல் அடியை எடுத்து வைக்கிறார். அவர் எடுத்து வைத்த முதல் அடியை, தண்ணீரில், அதுவும் ஓடுகின்ற ஆற்று நீரில் எடுத்து வைத்தார். இது நம் சிந்தனைகளைத் தூண்டும் அழகான ஓர் அடையாளம்.
உறுதியான தரையில் நிற்பதற்கும், ஓடும் நீரில் நிற்பதற்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு. இயேசு தன் பணியைத் துவக்கிய வேளையில், இஸ்ரயேல் சமுதாயம் பல வழிகளில் நிலையற்ற ஒரு சமுதாயமாக இருந்தது என்பதை யோர்தானில் ஓடிய அந்த நீர் உருவகப்படுத்தியதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இனி தொடரும் தன் பணிவாழ்வில், தந்தையாம் இறைவனின் அன்பைத் தவிர வேறு எதுவும் இயேசுவுக்கு உறுதியளிக்காது என்பதை உணர்த்த அவர் தன் பணிவாழ்வின் முதல் அடியை ஓடும் நீரில் எடுத்து வைத்தாரோ?

ஓடும் நீரில் மற்றோர் அழகும் உண்டு... தேங்கி நிற்கும் நீரை விட, ஓடும் நீரில் உயிர்கள் வாழவும் வளரவும் வாய்ப்பு அதிகம் உண்டு. இயேசுவும் ஓடும் நீரைப் போல் பலருக்கு வாழ்வளிக்க விரும்பியதால், ஓடும் ஆற்று நீரைத் தன் பணிவாழ்வின் முதல் தளமாகத் தேர்ந்தெடுத்தாரோ?.

அந்த ஆற்று நீரில் இயேசு தனியே தன் திருமுழுக்கைப் பெறவில்லை. மக்களோடு, மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். எந்த மக்களை விடுவிக்க அவர் தீர்மானித்தாரோ, அந்த மக்களில் ஒருவராய் மாறினார். அவர் அப்படி கலந்து, கரைந்து நின்றது திருமுழுக்கு யோவானுக்குச் சங்கடத்தை விளைவித்தது. எனினும், இயேசு தன் முடிவிலிருந்து மாறவில்லை.
ஓடும் நீரில் இறங்கியது, மக்களோடு மக்களாய் கரைந்தது என்ற இந்த இரு செயல்கள் வழியாக தன் பணியின் நோக்கத்தை இயேசு உலகறியச் செய்தார். விண்ணகத் தந்தையும் தன் பங்கிற்கு தன் அன்பு மகனை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“இவரே என் அன்பார்ந்த மைந்தர்” என்று தந்தை வானத்திலிருந்து முழங்கியபோது, தன் மைந்தனுக்குரிய, தன் பணியைச் செய்யும் ஊழியனுக்குரிய இலக்கணத்தை உலகறியச் செய்தார். அந்த இலக்கணம் இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு இறைவாக்கினர் எசாயா மூலமாகச் சொல்லப்பட்டுள்ளது.

எசாயா 42: 1-4, 6-7
இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்... உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்... இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்: பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

இறுதியாக, அன்புள்ளங்களே, சிறப்பான சில வேண்டுதல்களோடு நம் சிந்தனைகளை நிறைவுசெய்வோம். கடந்த டிசம்பர், மற்றும் நடைபெறும் சனவரி மாதங்களில் பல இளையோர் தங்கள் குருத்துவப் பயிற்சியை முடித்துவிட்டு, அருள் பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டனர். குழந்தைகளாய் இருந்தபோது திருமுழுக்கு பெற்ற அவர்களுக்கு, இதுவும் ஒருவகை திருமுழுக்கு அனுபவமே. இறைவனின் அன்பார்ந்த மக்கள் என்ற உறுதிப்பாட்டை உள்ளூர உணர்ந்தவர்களாய், இவர்கள் ஒவ்வொருவரும் இறைவாக்கினர் எசாயா கூறும் இறை ஊழியர்களாய் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள சிறப்பாக செபிப்போம்.
அடுத்துவரும் நாட்களில் பொங்கல் திருவிழாவையும், உழவர் திருவிழாவையும் கொண்டாடவிருக்கிறோம். இயற்கையும், மனித உறவுகளும் உழவர்களுக்கு உற்றதுணையாக இருந்து அவர்களை வாழவைக்க வேண்டும் என்றும், உழவர்கள் வாழ்வதால், இவ்வுலகமும் வாழவேண்டும் என்றும் இறைவனிடம் சிறப்பாக மன்றாடுவோம்.
அதேபோல், சனவரி 14, இச்செவ்வாயன்று முகம்மது நபி அவர்கள் பிறந்தநாளான மிலாடி நபி விழா கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நண்பர்கள் அனைவரையும் இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

நாம் அனைவருமே இறைவனின் அன்புக்குரிய குழந்தைகள் என்பதை இப்புதிய ஆண்டில் மீண்டும் ஒருமுறை உணர்வதற்கு, இஞ்ஞாயிறு வழிபாட்டின் வழியாக, இறைவன் நம் அனைவருக்குமே நல்லொளியைத் தரவேண்டும் என்று ஒருவர் ஒருவருக்காக வேண்டிக்கொள்வோம்.








All the contents on this site are copyrighted ©.