2014-01-10 15:43:20

பிலிப்பின்ஸ் நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட 'கறுப்பு நாசரேத்தூர் மனிதர்' ஊர்வலம்


சன.10,2014. பிலிப்பின்ஸ் மக்கள் இறைவன் மீது கொண்டிருக்கும் அன்பையும், பக்தியையும், அந்நாட்டில் நிலவும் வறுமையையும், ஊழலையும் அகற்றும் சக்திகளாகப் பயன்படுத்தவேண்டும் என்று கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் கூறினார்.
'கறுப்பு நாசரேத்தூர் மனிதர்' என்ற பெயருடன் வணங்கப்படும் கிறிஸ்துவின் ஒரு திரு உருவம், பிலிப்பின்ஸ் நாட்டில் மிகப் புகழ்பெற்ற ஒரு பக்தி முயற்சியாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் சனவரி 9ம் தேதி நடைபெறும் இந்தத் திருஉருவத்தின் ஊர்வலத்தை, இவ்வியாழன் மாலை திருப்பலியுடன் துவக்கிவைத்த மணிலா பேராயர் கர்தினால் Tagle அவர்கள், கிறிஸ்துவின் மீது கொள்ளும் பக்தி, அடுத்தவர் மீது காட்டும் அக்கரையில் வெளிப்படும் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
பிலிப்பின்ஸ் நாட்டை உலுக்கிய ஹையான் சூறாவளியையும், போஹோல் எனுமிடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும், இன்னும் அந்நாடு சந்தித்த பல்வேறு பிரச்சனைகளையும் தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் Tagle அவர்கள், இப்பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டோரை மறந்துவிட்டு, பக்தி முயற்சிகளில் மட்டும் ஈடுபடுவது பொருளற்றது என்று கூறினார்.
1 கோடியே, 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில், புதுமை சக்தி பெற்றதாய் கருதப்படும் இயேசுவின் திரு உருவத்தைத் தொடும் முயற்சியில் ஈடுபட்ட மக்களை காவல் துறை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், இதனால், 1600க்கும் அதிகமானோர் காயமுற்றனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / UCAN







All the contents on this site are copyrighted ©.