2014-01-10 15:43:28

ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் சிரியாவில் வாழும் அனைவருக்கும் நன்மைகளைக் கொணரவேண்டும் - சிரியாவின் பேராயர்


சன.10,2014. சனவரி 22ம் தேதி, ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மத்தியக்கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகள் கூட்டம், சிரியாவில் வாழும் அனைவருக்கும் நன்மைகளைக் கொணரும் கூட்டமாக அமையவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டுள்ளார் சிரியாவின் பேராயர் ஒருவர்.
சிரியாவில் போராடிவரும் அரசுத் தரப்பினருக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே, ஐ.நா.அவையின் முயற்சியால் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகள், அனைத்து மக்களுக்கும் விடுதலையையும், குடி உரிமைகளையும் கொணரும் ஒரு கூட்டமாக அமையவேண்டும் என்று Hassaké-Nisibisன் பேராயர் Jacques Behnan Hindo அவர்கள் கூறினார்.
சிரியாவில் இஸ்லாமிய Sharia சட்ட அமைப்பினைக் கொணரவிழையும் அனைத்து முயற்சிகளையும் ஒத்துக்கிவைத்துவிட்டு, உண்மையான விடுதலையை நோக்கி அனைத்து மக்களையும் வழிநடத்தும் வகையில் ஜெனீவா கூட்டம் அமையவேண்டும் என்று பேராயர் Hindo அவர்கள் வலியுறுத்தினார்.
மதக் கோட்பாடுகள் என்ற போர்வையில் அரக்கத்தனமான அடக்குமுறைகளை, குறிப்பாக, கிறிஸ்தவர்கள் மீது திணிக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Hindo அவர்கள், கிறிஸ்தவர்களும் சிரியா நாட்டின் முக்கியக் குடிமக்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேவை என்பதை எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Zenit / Fides







All the contents on this site are copyrighted ©.