2014-01-10 15:37:32

சன.11,2014. புனிதரும் மனிதரே. - பைத்தியம் எனக் கல்லால் அடித்தனர்


அவிலாவின் யோவான் என்ற போதகர் ஒருநாள் கோவிலில் மறைபோதனை வழங்கிக் கொண்டிருந்தபோது, கோவிலில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென எழுந்து தெரு நோக்கி ஓடினார். தன் சட்டையை பல்லால் கடித்துக் கிழித்துக்கோன்டே, தன் கடையிலிருந்த ஆன்மீகப் புத்தகங்கள் தவிர ஏனையப் புத்தகங்களைக் கிழித்தெறிந்தார். தன் தாடியைக் கையால் பிடித்து முடிகளைப் பிடுங்கினார். மார்பில் அறைந்துகொண்டார். 'என் பாவங்களுக்காக என்னைக் கல்லால் அடியுங்கள்', என மக்களை நோக்கி மன்றாடினார். சிறார்கள் அவரைக் கல்லால் அடித்தனர். மக்கள் அவரை பைத்தியம் என எண்ணி பைத்தியக்கார விடுதியில் சேர்த்தனர். 'போர் வீரனாயிருந்த நான், குடித்து கும்மாளமிட்டு இறைவனையும் ஒழுக்கரீதிகளையும் மறந்து வாழ்க்கையை வீணாக்கிவிட்டேன். அதற்கான பரிகாரமாக என்னையே வருத்திக்கொள்ளவேண்டும்' என அழுதுகொண்டேயிருந்தார். யாருடைய போதனையைக் கேட்டு இந்த நிலைக்கு ஆளானாரோ அந்தக் குரு அவிலாவின் யோவான் இவரை வந்துப் பார்த்துச் சொன்னார், 'செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்யவேண்டுமானால், உன்னையே வருத்திக்கொள்வதை விடுத்து நல்ல காரியங்கள் மூலம் அந்தப் பரிகாரத்தை ஆற்று' என்று. பைத்தியக்கார விடுதியிலிருந்து வெளிவந்த அவர், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, கைவிடப்பட்ட நோயாளிகளை அங்கு வைத்துப் பராமரித்தார். நோயாளிகளைக் கவனிப்பதற்கென ஒரு துறவு சபைத் துவக்கப்பட காரணமானார். அவர் தான் புனித இறை யோவான்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.