2014-01-10 15:44:08

இலங்கை போர்க் குற்றம் தொடர்பான படங்களை வெளியிட்டது அமெரிக்கா: ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர தீவிரம்


சன.10,2014. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அந்நாட்டு இராணுவத்தால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இடங்களின் புகைப்படங்களை அமெரிக்கா பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் அப்புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 2009-ம் ஆண்டில் இலங்கை இராணுவத்தின் பீரங்கித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் கொல்லப்பட்ட இடமான செயின்ட் அந்தோனி விளையாட்டுத்திடலின் புகைப்படம் பிரதானமாக இடம்பெற்றுள்ளது.
2009 மே மாதம் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் 40,000-க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை இலங்கை அரசு ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீபன் ஜே.ராப் அவர்கள், இலங்கையில் தமிழர் பகுதிகளை இவ்வியாழனன்று நேரில் பார்வையிட்டார். அவரது சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து, ட்விட்டரில் இராணுவப் போர்க் குற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் மேல்மட்டக் கூட்டத்தில், போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது என்று ஸ்டீபன் ஜே ராப் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : The Hindu







All the contents on this site are copyrighted ©.