2014-01-09 15:49:36

கிறிஸ்துவின் படையணியினர் என்ற அருள் பணியாளர்களின் சிறப்பு அவை


சன.09,2014. கிறிஸ்துவின் படையணியினர் (Legionaries of Christ) என்ற அருள் பணியாளர்களின் சிறப்பு அவையொன்று சனவரி 9 இவ்வியாழன் முதல் உரோம் நகரில் நடைபெறுகிறது.
கர்தினால் Velasio de Paolis அவர்களின் தலைமையில், இப்புதன் மாலை நடைபெற்ற ஒரு திருப்பலியுடன் துவங்கிய இந்தச் சிறப்பு அவை, பிப்ரவரி மாதம் இறுதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1941ம் ஆண்டு, மெக்சிகோவில் துவக்கப்பட்ட கிறிஸ்துவின் படையணியினர் என்ற இக்குழுவின் செயல்பாடுகளை மறுபரிசீலினை செய்யும் பொறுப்பை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கர்தினால் Paolis அவர்களிடம் 2010ம் ஆண்டு ஒப்படைத்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஆய்வின் இறுதிக் கட்டமாக, அருள் பணியாளர்களின் இந்தக் கூட்டம் இவ்வியாழனன்று உரோம் நகரில் துவங்கியுள்ளது.
துவங்கியுள்ள இந்தச் சிறப்பு அவையின் நடவடிக்கைகளைக் குறித்து, கர்தினால் Paolis அவர்களை, வத்திக்கான் வானொலி இயக்குனர் அருள்பணியாளர் Federico Lombardi அவர்கள் பேட்டி கண்டார்.
2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி, கிறிஸ்துவின் படையணியினர் குழுவில், 3 ஆயர்கள், 953 அருள் பணியாளர்கள், ஏறத்தாழ 1900 குரு மாணவர்கள் உள்ளனர் என்றும், இக்குழுவைச் சார்ந்தவர்கள் 22 நாடுகளில் பணியாற்றுகின்றனர் என்றும் தெரிகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.