2014-01-08 14:59:06

புனிதரும் மனிதரே : புனித மார்ட்டின் டி போரஸ்


”நான் ஓர் ஆப்ரிக்க கருப்பு இனத்தவருக்கும் வெள்ளை இனத்தவருக்கும் பிறந்தவன். என்னை விற்றுவிடுங்கள். நான் சபையின் சொத்து. என்னை விற்றுவிடுங்கள்” என்று சொன்னவர் மார்ட்டின். இவர் வாழ்ந்த துறவு இல்லம் கடன் பிரச்சனையால் கஷ்டப்பட்டபோது இவ்வாறு கூறினார். அந்த அளவுக்கு இவர் சாதாரண எளிய வாழ்வை மேற்கொண்டார். மார்ட்டின், பானமா நாட்டில் விடுதலையடைந்த அடிமைப் பெண்ணிடம் பிறந்தவர். இவர் தனது தாயின் சாயலைக்கொண்டு கருப்பாக இருந்ததால் இவரது தந்தை இவரை வெறுத்தார். இவரது பெற்றோர் திருமணம் செய்துகொள்ளவே இல்லை. மார்ட்டினுக்குத் தங்கை பிறந்தவுடன் இவரது தந்தை குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவிட்டார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது. மார்ட்டினுக்கு 12 வயது நடந்தபோது இவரது தாய் இவரை முடிதிருத்தம் செய்யும் ஒருவரிடம் வேலைக்குச் சேர்த்தார். முடிதிருத்தம் செய்வதைக் கற்றதோடு, அக்காலத்தில் தரமான மருத்துவ சிகிச்சையாக இருந்த இரத்தம் எடுக்கும் சிகிச்சையையும் கற்றுக்கொண்டார். அதோடு, காயங்களுக்கு மருந்துபோடவும், மருந்துகொடுக்க உதவவும் கற்றுக்கொண்டார். இவையே இவர் பின்னாளில் சேர்ந்த தொமினிக்கன்(சாமிநாதர்) சபையில் நோயாளிகளைப் பராமரிக்க உதவியது. கருணை இல்லங்களைத் தொடங்கக் காரணமாக இருந்த மார்ட்டின், ஆப்ரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைகளையும் பராமரித்தார். சமையலறை வேலை, துணி துவைத்தல், நோயாளிகளைப் பராமரித்தல் போன்றவையே இவரது அன்றாட வேலைகள். சமையல் அறையில் எலிகளும் சுண்டெலிகளும் ஓடினால் விரட்டமாட்டார். அவை பசிக்காக அலைகின்றன என்பார் இவர். சாதாரண வேலைகளைச் செய்த மார்ட்டின் இறைவனின் அசாதாரணக் கொடைகளாலும் நிரம்பியிருந்தார். இவரது விழா நவம்பர் 3ம் தேதியன்று சிறப்பிக்கப்படுகின்றது. "தந்தை யார் எனத் தெரியாதவர்", "கலப்பு இனப்பிள்ளை", "போர் நினைவுப்பொருள்" என்றெல்லாம் புனித மார்ட்டின் பற்றிக் கேலியாகப் பேசுவார்களாம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.