2014-01-07 15:14:20

மறைமாவட்ட அருள்பணியாளர்க்கு ‘பேரருள்திரு’ என்ற மதிப்புக்குரிய அடைமொழியில் வரையறை


சன.07,2014. மறைமாவட்ட அருள்பணியாளர்க்கு “monsignor” அதாவது ‘பேரருள்திரு’ என்ற மதிப்புக்குரிய அடைமொழி வழங்கப்படுவதில் வரையறையைக் கொண்டுவருவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானித்திருப்பதாகவும், குறைந்தது 65 வயதுடையவர்களே இன்றிலிருந்து இந்த மதிப்புக்குரிய அடைமொழியைப் பெறுவார்கள் எனவும் திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து உலகின் அனைத்து திருப்பீட தூதர்களுக்கும் பேராயர் பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த மாற்றம் திருப்பீட தலைமையகத்தில் பணிசெய்யும் அதிகாரிகளையும், துறவற சபைகளின் உறுப்பினர்களையும் பாதிக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மதிப்புக்குரிய அடைமொழிக்கு விண்ணப்பித்து இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் பரிந்துரைகள் இந்தப் புதிய விதிகளின்படி இரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
monsignor என்ற மதிப்புக்குரிய அடைமொழியிலுள்ள மூன்று நிலைகளில், chaplain of His Holiness என்பது மட்டுமே, புதிய விதிமுறைகளின்படி இனிமேல் வழங்கப்படும் எனவும் பேராயரின் கடிதம் கூறுகிறது.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், இந்த மதிப்புக்குரிய அடைமொழிகளை 1968ம் ஆண்டில் மூன்றாகக் குறைத்தார், இதனை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேலும் எளிமையாக்கியுள்ளார் என்று திருப்பீட பேச்சாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி சே.ச.நிருபர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.