2014-01-07 15:14:53

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இடம்பெற்றுவரும் சண்டை சமயப் போராக மாறக்கூடும், ஐ.நா. எச்சரிக்கை


சன.07,2014. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இடம்பெற்று வரும் மோதல்கள் நாளுக்குநாள் வலுவடைந்துவரும் நிலையில், இவை அந்நாட்டின் எல்லைகளையும் கடந்து, ஒரு சமயப் போராக உருவெடுத்து அப்பகுதி முழுவதும் உறுதியற்ற தன்மையை உருவாக்கக்கூடும் என ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
தலைநகர் Bangui மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் ஒவ்வொரு நாளும் கொலைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்றும், மக்களும் மதம் வாரியாகப் பிளவுபட்டுள்ளனர் என்றும் ஐ.நா.வின் அரசியல் ஆலோசனைகளுக்கான நேரடிப் பொதுச் செயலர் Jeffrey Feltman, பாதுகாப்பு அவையிடம் கூறியுள்ளார்.
கடும் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஏறக்குறைய 10 இலட்சம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் மற்றும் 22 இலட்சம் பேருக்கு, அதாவது அந்நாட்டின் பாதிப்பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் கூறினார் Feltman.
கடந்த மார்ச் மாதத்தில் அரசுத்தலைவர் François Bozizé பதவி விலகுவதற்கு, செலேக்கா முஸ்லிம் தீவிரவாத அமைப்பு காரணமாக இருந்ததையொட்டி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவப் புரட்சிக்குழுக்களுக்கிடையே சண்டை தொடங்கியது.
அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்தி சனநாயகத் தேர்தல்களுக்கு இடைக்கால அரசு முயற்சித்து வருகின்றது. ஆயினும் இப்புரட்சிக்குழுக்களிடையே கடந்த இரு வாரங்களாக இடம்பெற்றுவரும் கடும் ஆயுதம் தாங்கிய மோதல்கள் இதற்குத் தடையாக இருந்து வருகின்றன என ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.