2014-01-07 15:14:06

திருத்தந்தை பிரான்சிஸ் : நம் எண்ணங்களையும் விருப்பங்களையும் பரிசோதிக்க வேண்டும்


சன.07,2014. நம் எண்ணங்களும் விருப்பங்களும் நம் ஆண்டவரில் நிலைத்திருக்க அல்லது அவரைவிட்டு விலகிச்செல்ல உதவுகின்றனவா, நம் எண்ணங்களும் ஆசைகளும் கிறிஸ்துவிடமிருந்து அல்லது எதிர்க் கிறிஸ்துவிடமிருந்து வருகின்றனவா என்பதை நாம் பரிசோதித்துப் பார்க்க வேண்டும், ஏனெனில் பல போலி இறைவாக்கினர்கள் இவ்வுலகுக்கு வந்துள்ளனர் என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்மஸ் விடுமுறை காலம் முடிந்து வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் பொதுநிலை விசுவாசிகளுக்கென நிறைவேற்றிய காலை திருப்பலியில், இந்த நம் உலகில் பல போலி இறைவாக்கினர்களும், போலி இறைவாக்குகளும், போலிப் பரிந்துரைகளும் புகுந்துள்ளன என எச்சரித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆண்டவரில் நிலைத்திருங்கள் என்ற புனித யோவானின் அறிவுரையை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், புனித யோவான் மிகுந்த விருப்பத்துடன் மீண்டும் மீண்டும் சொல்லியுள்ள இவ்வறிவுரை நல்ல ஆலோசனையாகும் என்று கூறினார்.
ஆவிகளைப் பிரித்தறியும் அறிவை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும் என்றும், நம் இதயங்கள் எப்போதும் பேராசைகளையும், எண்ணங்களையும், விருப்பங்களையும் கொண்டுள்ளன, ஆனால் இவை நம் ஆண்டவரை நெருங்கிச் செல்வதற்கு அல்லது அவரிடமிருந்து விலகிச் செல்வதற்கு உதவுகின்றனவா என்பதைத் தேர்ந்துதெளிய நாம் அறிந்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
நம் இதயங்களில் என்ன நடக்கின்றன என்பதை நாம் ஒவ்வொருவரும் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமென இச்செவ்வாய் காலை திருப்பலி மறையுரையில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.