2014-01-07 15:14:37

அமைதிக்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அமெரிக்க ஆயர் புனிதபூமிக்குச் சுற்றுப்பயணம்


சன.07,2014. புனிதபூமியின் அமைதிக்கான முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்குச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் பன்னாட்டு நீதி-அமைதி பணிக்குழுத் தலைவர் ஆயர் Richard Pates.
மத்திய கிழக்குப் பகுதியில் சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ள தலத்திருஅவைகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்திலும், அத்திருஅவைகளுக்கு ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் எண்ணத்திலும் அப்பகுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார் Des Moines ஆயர் Pates.
இத்திங்கள் முதல் இம்மாதம் 17வரை மத்திய கிழக்குப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அப்பகுதி எதிர்கொள்ளும் அமைதிக்கான சவால்கள் குறித்தும் ஆய்வுசெய்யத் திட்டமிட்டுள்ளார் அமெரிக்க ஆயர் Pates.
புனிதபூமித் தலத்திருஅவைகளுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்னாப்ரிக்கா ஆகிய பகுதிகளின் ஆயர் பிரதிநிதிகளை உள்ளடக்கிய பேரவை நடத்தும் கூட்டத்திலும் ஆயர் Pates கலந்துகொள்வார்.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.