2014-01-06 14:46:51

வாரம் ஓர் அலசல் – புதிய ஆண்டுக்கு நமது பரிசு


சன.06,2014. RealAudioMP3 கடந்த 12 நாள்களாக, அதாவது கடந்த டிசம்பர் 25, கிறிஸ்மஸ் பெருவிழாவிலிருந்து சனவரி 5 வரை விழாக்கோலம் பூண்டிருந்த மேற்குலக நாடுகள் சனவரி 6 இத்திங்களன்று விழா நாள்களை நிறைவு செய்துள்ளன. சனவரி 7, இச்செவ்வாய்க்கிழமையிலிருந்து மக்கள் வழக்கமான பணிகளுக்குத் திரும்புகின்றனர். இதே நாளில் பள்ளிகளும் கல்லூரிகளும் கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கின்றன. கிறிஸ்தவக் கலாச்சாரங்களைக் கொண்ட சில நாடுகளில், குறிப்பாக, இலத்தீன் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இந்த விழாக் காலம் நாற்பது நாள்கள் நீடிக்கின்றது. பிப்ரவரி 2ம் தேதி மெழுகுதிரி விழாவோடு இவ்விழாக் காலத்தை முடிக்கின்றன. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கும் அழகான, எளிய குடில் இதற்குப் பின்னர் அகற்றப்படும். இந்த 12 நாள் கிறிஸ்மஸ் விடுமுறைக் காலத்தின் நிறைவாக, சனவரி 6ம் நாளன்று இத்தாலியில் ஏறக்குறைய எல்லா நகரங்களிலும் La Befana என்ற பாரம்பரிய விழா சிறப்பிக்கப்படுகின்றது. இந்நாள் இத்தாலிக்கு தேசிய விடுமுறையாகும். வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவை நோக்கியிருக்கும் Conciliazione என்ற அகன்ற சாலையில் இந்நாளில் காலை 10 மணிக்குமேல், La Befana, சிறார், இளையோர், வயதுவந்தோர், முதியோர் என நூற்றுக்கணக்கானவர்கள் பலவிதமான மரபு உடைகளில் கிறிஸ்மஸை சித்தரிக்கும் வகையில் இன்னிசைக் கருவிகளை இசைத்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் அணிவகுத்துச் செல்வர். இவ்வணிவகுப்பில் சிலர், கீழ்த்திசை ஞானிகளைக் குறிக்கும் விதமாக, அரச உடையணிந்து குதிரைகளில் பரிசுகளை எடுத்துச் செல்வர். இந்த அணி வகுப்பு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் பகல் 12 மணிக்கு நிறைவடையும். அவ்வேளையில் திருத்தந்தை அவர்கள் வழங்கும் இப்பெருவிழா மூவேளை செப உரையைக் கேட்டு அவரின் ஆசீர்பெற்றுச் செல்வது இத்தாலியில் வழக்கமாக இருந்து வருகிறது. இந்த அணிவகுப்பை ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நகராட்சி நடத்துகிறது. இவ்வாண்டு இத்திங்களன்று இவ்வணிவகுப்பை ரியெத்தி மாவட்டத்தின் லெயோனேசா நகரம் நடத்தியது.
இதே சனவரி 6 திருக்காட்சி விழாவாகும். அதாவது மூன்று கீழ்த்திசை ஞானிகள் பெத்லகேமில் பிறந்திருந்த குழந்தை இயேசுவை தரிசித்து தங்களின் பரிசுப்பொருள்களை இயேசுவுக்குக் கொடுத்த விழாவாகும். இந்த மூன்று கீழ்த்திசை ஞானிகளை, முன்பெல்லாம் அரசர்கள் என்று சொல்வதுண்டு. கஸ்பார், மெல்கியூர், பல்தசார் ஆகிய பெயர்களாலும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். La Befanaவுக்கும் Epiphany என்ற மூன்று கீழைநாட்டு அரசர்களுக்கு குழந்தை இயேசு தம்மை வெளிப்படுத்திய விழாவுக்கும் தொடர்பு இருப்பதாக இத்தாலியில் மரபுவழியாக ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது. சனவரி 5ம் தேதிக்கும் 6ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் இந்த மூன்று அரசர்களும் குழந்தை இயேசுவைத் தரிசிக்க விரும்பினர். இவர்கள் தங்கள் பரிசுப்பொருள்களைச் சுமந்துகொண்டு இரவு முழுவதும் நடந்தனர். ஒரு கட்டத்தில் வழியை இழந்து La Befana என்ற ஒரு வயதான பெண்ணின் வீட்டுக் கதவைத் தட்டினர். அந்தப் பெண் விருந்தினரை நன்கு வரவேற்பவர். எனவே அப்பெண் இவர்களை வரவேற்று வேண்டிய உதவிகளையும் செய்தார். பின்னர் அம்மூவரும் அப்பெண்ணிடம், குழந்தை இயேசுவைக் காண்பதற்கு வழி கேட்டதோடு தங்களோடு பெத்லகேம்வரை வர முடியுமா எனவும் கேட்டனர். அந்தப் பெண்ணோ, தனக்கு வீட்டில் அதிக வேலைகள் இருக்கின்றன, அதனால் தன்னால் வர முடியாது எனச் சொல்லிவிட்டார். எனவே அம்மூவரும் பெத்லகேமுக்கு வழியைத் தெரிந்துகொண்டு சென்றுவிட்டனர். பின்னர் அந்தப் பெண் குழந்தை இயேசு யார் எனப் புரிந்துகொண்டு, தனது மனதை மாற்றி இயேசுவைக் காணும் ஆவலில் அம்மூவரையும் இரவு முழுவதும் தேடினார். அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதலால் இந்நாள்வரை La Befana குழந்தை இயேசுவைத் தேடிக்கொண்டிருக்கிறாராம். ஆண்டுதோறும் அதேநாள் இரவில் இவர் பெரிய பை நிறைய பரிசுப்பொருள்களைத் தோளில் சுமந்துசென்று ஒவ்வொரு வீட்டிலும் சிறாருக்குப் பரிசுகளை வழங்கி வந்தாராம். இத்தாலியச் சிறார் தங்கள் வீட்டுக் கதவுகளில் காலணிஉறை வடிவில் பைகளை மாட்டி வைக்க, நல்ல பிள்ளைகளுக்கு பொம்மைகளும் சாக்லேட்டுகளும், பெற்றோர் சொல் கேட்காத பிள்ளைகளுக்கு கரித்துண்டும், வெங்காயமும் வெள்ளைப்பூண்டும் பைகளில் போட்டாராம். இக்காலத்தில் கிறிஸ்மஸ் தாத்தா பரிசுப்பொருள்கள் கொடுப்பதை La Befanaவோடு சிலர் ஒப்பிட்டுப் பேசுகின்றனர்.
La Befana என்ற மூதாட்டி பற்றி பாரம்பரியமாக மற்றொரு கதையும் சொல்லப்படுகின்றது. La Befana ஒரு சாதாரணப் பெண். இவருக்கு ஒரு குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையை La Befana மிகவும் அன்பு செய்தார். அக்குழந்தை ஒருநாள் இறந்துவிட்டதால் மிகவும் வருந்தினார். அச்சமயத்தில் இயேசு பிறந்திருப்பதைக் கேள்விப்பட்டு, அவர்தான் தனது மகன் என்ற மாயையில் அவரைப் பார்க்கப் புறப்பட்டார். ஒரு வழியாக பெத்லகேம் சென்று குழந்தை இயேசுவைத் தரிசித்து பரிசுகளையும் வழங்கினார். இயேசுவும் மகிழ்ந்து La Befanaவுக்கு ஒரு பரிசு வழங்கினார். அதாவது La Befana, இத்தாலியிலுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தாயாக இருக்கவேண்டுமென்பதே அப்பரிசு. பொதுவாக, La Befana, வயதான, அழுக்கான நாகரீகமற்ற உடையுடன், நீண்ட மூக்குடன், தோளில் பையுடன், நீண்ட துடைப்பம் குச்சியில் பறந்து செல்பவராகச் சித்தரிக்கப்படுகிறார். இந்தக் குச்சியில் பயணம் செய்து வீடுகளின் சாவித் துவாரங்களில் எளிதாக நுழைந்து பரிசுப்பொருள்களைப் போடுகிறார். இவர் துடைப்பக் குச்சியில் பயணம் செய்வதால் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பவர். இவர் பறந்துசெல்வதால் எந்த உயிரினத்துக்கும் தீமை செய்யாதவர். பரிசுப்பொருள்களைப் பெறத் தகுதியுடைய சிறார்க்கு மட்டுமே இனிப்புகள் அளிப்பதால் La Befana நீதியைச் சுமப்பவர். தப்புசெய்யும் சிறார்க்கு இவர் அளிக்கும் தண்டனை மிகவும் மென்மையாக இருப்பதால் இவர் சகிப்புத்தன்மையுள்ளவர் என்றெல்லாம் காட்டப்படுகிறார்.
அன்பு நெஞ்சங்களே, இந்த விழாக்களில் பரிசுப்பொருள்களே முக்கிய இடம் வகிக்கின்றன. ஆலய வழிபாடுகள்கூட முக்கியமாக இருக்காது, ஆனால் பரிசுப்பொருள்களைப் பெறுவதிலும் கொடுப்பதிலும் பலர் கவனமாக இருக்கின்றனர். அன்று குழந்தை இயேசுவை தரிசித்த மூன்று ஞானிகள், இயேசுவின் பண்பைக் குறிக்கும் பொன்னையும், சாம்பிராணியையும், வெள்ளைப்போளத்தையும் இயேசுவுக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அறிவியலாளர்கள், ஆன்மீகவாதிகள், சமூக ஆர்வலர்கள், அமைதி விரும்பிகள், இசை ஞானிகள், கவியரசர்கள், கலை நிபுணர்கள் என பல்வேறு துறைகளில் சிறந்தவர்கள் இந்த உலகுக்கு மதிப்பிடமுடியாத பரிசுகளைக் கொடுத்துள்ளனர். இவர்கள் விட்டுச்சென்றுள்ள பரிசுப்பொருள்கள் உலகினருக்கு எக்காலத்துக்கும் வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. அன்னை தெரேசா விட்டுச்சென்றுள்ள பரிசுப்பொருள், ஆதரவற்றோர் மத்தியில் அன்புப்பணி செய்ய மனித சமுதாயத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. புனித தமியான் விட்டுச்சென்றுள்ள பரிசுப்பொருள் தொழுநோயாளர்ப் பணிக்கு அர்ப்பணிக்க அனைவரையும் அழைக்கின்றது. அண்ணல்காந்தி, அஹிம்சை என்ற பரிசுப்பொருளையும், மார்ட்டின் லூத்தர், மண்டேலா போன்றவர்கள், ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வுக்கான தியாகம் என்ற பரிசுப்பொருளையும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சர்.சி.வி. இராமன் போன்றவர்கள் அறிவியலுக்கான தாகம் என்ற பரிசுப்பொருளையும், இரவீந்தரநாத் தாகூர் போன்றவர்கள் அமர காவியப் படைப்பு என்ற பரிசுப்பொருளையும், மிக்கேல் ஆஞ்சலோ, பாப்லோ பிக்காசோ போன்றவர்கள், காலத்தால் போற்றப்படும் ஞானமிகுந்த சிற்பம், ஓவியம் போன்ற பரிசுப்பொருள்களையும் விட்டுச்சென்றுள்ளனர். இவர்கள் போன்று இன்னும் எத்தனையோ பேர் உள்ளனர்.
இன்றும் சிலர் விலைமதிப்பில்லாப் பரிசுப்பொருள்களை வழங்கி வருகின்றனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவைக்கு தற்போது கிடைத்துள்ள பரிசு என்று நாம் துணிந்து சொல்லலாம். அன்பர்களே, நாம் எவ்வகையான பரிசுப்பொருள்களை நம் குடும்பத்துக்கும், நாம் சார்ந்துள்ள சமூகத்துக்கும், நாட்டுக்கும் விட்டுச்செல்வதற்கு முயற்சிக்கிறோம்? நாம் வாழும் இடங்களைவிட்டுச் சென்றாலும் அவ்விடங்களில் தொடர்ந்து வாழ்வோர்க்கு, நாம் விட்டுச்செல்லும் நற்செயல்களும், நாம் பிறரில் பதிக்கும் நல்எண்ணங்களும் என்றும் பரிசுப்பொருள்களாகவே போற்றப்படும். அன்பான தாயாக, பாசமிகு தந்தையாக, பெற்றவர் போற்றும் பிள்ளையாக, நம்பிக்கையுள்ள நண்பராக, மனிதமிக்கவர்களாக வாழ்வதே நாம் அளிக்கும் சிறந்த பரிசுப்பொருள்தானே.
ஓர் ஊரில் திருக்காட்சிப் பெற்றிருந்த மிகப் பெரிய துறவி ஒருவர் இருந்தார். இவர் துணிகள் தைத்து பிழைப்பு நடத்தினார். ஒருசமயம், மனநிம்மதியை இழந்த பேரரசர் ஒருவர் இந்தத் துறவியைச் சந்தித்து அவரது ஞானமிக்க வார்த்தைகளைக் கேட்டார். நிம்மதிஅருளும் பெற்றார். துறவியை விட்டுப்பிரியும் நேரத்தில் அவருக்கு பரிசு தர விரும்பிய பேரரசர், வைரக்கற்கள் பதித்த தங்கக் கத்தரிக்கோல் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். அது துறவியின் தொழிலுக்கு உதவும் என்று நினைத்த பேரரசர், இதை என் நினைவாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அதை வாங்க மறுத்துவிட்டார் துறவி. முகம் வாடிய பேரரசர் துறவியிடம், தங்களுக்கு உதவக்கூடிய பரிசு எது என்று கேட்டார். எனக்கு ஒரு சாதாரண ஊசியே போதுமானது என்றார் துறவி. கத்தரிக்கோலை மறுத்து ஊசி போதும் எனக் கேட்கிறீர்களே, அது ஏன் எனக் கேட்டார் பேரரசர். அதற்கு துறவி, கத்தரிக்கோல் வெட்டும், பிரிக்கும். ஆனால் ஊசியோ தைக்கும், இணைக்கும் என்று பதில் சொன்னார்.
வெட்டுவது, பிரிப்பது எளிது. அது மனங்களைக் காயப்படுத்தும். உறவுகளைத் துண்டாக்கும். ஆனால் ஒட்டுவதற்கு நுணுக்கங்களும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் மன்னிப்பும் ஒப்புரவும், மொத்தத்தில் உள்ளார்ந்த அன்பும் தேவை. ஆதலால் நாம் ஒட்டுபவர்களாக வாழ்வோம். எரிந்துகொண்டிருக்கும் மனக்காயங்களுக்கு எண்ணெய் ஊற்றாமல், மருந்து போடுபவர்களாக இருப்போம். அமைதிக்கு கேடுசெய்யும் எதையும் செய்யாதிருப்போம். வாக்கிலும் வாழ்விலும் சுத்தம் காப்போம். தன்னலமற்ற வாழ்வால் நம் வாழ்வையே பரிசாக வழங்குவோம். இதைவிட நாம் கொடுக்கும் பெரிய பரிசுப்பொருள் வேறு ஏதாவது உள்ளதா? அன்பு நெஞ்சங்களே, 2014ம் ஆண்டில் இந்த முதல் வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சியின் மூலம், நாம் வாழும் சூழல்களில் சிறந்த பரிசுப்பொருள்களை வழங்க உங்களை அழைக்கின்றோம். உங்களது பரிசுப்பொருள்களை அஞ்சல் அட்டையில் நாங்கள் எதிர்பார்க்கலாமா.







All the contents on this site are copyrighted ©.