2014-01-06 15:23:54

புனித பூமியில் திருத்தந்தையின் திருப்பணயம் மே மாதத்தில்


சன.06,2014. இயேசு பிறந்து, வாழ்ந்து, இறந்த புனித பூமியில், இவ்வாண்டு மே மாதம் 24 முதல் 26 வரை திருப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை 6ம் பவுலுக்கும் கிறிஸ்தவ முதுபெரும் தலைவர் Athenagorasக்கும் இடையே இடம்பெற்ற வரலாற்று சிறப்புவாய்ந்த சந்திப்பின் 50 ஆண்டு நிறைவு, இந்த சனவரி 5ம் தேதி இடம்பெற்றதையொட்டி இத்திருப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜோர்தனின் அம்மன், மற்றும், பெத்லகேம், எருசலேம் என மூன்று இடங்களில் இத்திருப்பயணம் இடம்பெறும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் கான்ஸ்டான்டிநோபிளின் முதுபெரும் தலைவர் பர்த்தலோமேயு உட்பட பல கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளுடன் நடைபெறவிருக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டத்தில் தான் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிவித்தார்.
தன் மூவேளை செப உரையின் இறுதியில், தனக்கு இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் வாழ்த்துக்களை அனுப்பியுள்ள அனைவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவிக்க விரும்பினாலும், அதற்கான நேரம் இன்மையால் அனைவருக்கும் தற்போது தன் நன்றியை வெளியிடுவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.