2014-01-06 15:21:25

திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை


சன.06,2014. ‘வார்த்தை மனுவுருவானார், நம்மிடையே குடிகொண்டார்’ என்ற புனித யோவான் நற்செய்தி வார்த்தைகளை மையமாக வைத்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவன் மனிதரைப்போல் பிறந்து நம் ஒவ்வொருவருக்கும் தன் வாழ்வையும் மகிழ்வையும் எடுத்துரைக்க விரும்பினார், மனித குலம் மீது இறைவன் கொண்டுள்ள அளவற்ற அன்பின் வெளிப்பாடே கிறிஸ்து பிறப்புப் பெருவிழா என்ற திருத்தந்தை, பாவிகளாகிய நமக்கு அருளை வழங்கவந்த இறைவனை, பலவேளைகளில் ஒதுக்கி வைக்கிறோம் எனவும் கூறினார்.
நாம் அவரைவிட்டு விலகிச் சென்றாலும் அவர் நமக்காக எப்போதும் காத்திருக்கிறார், அதில் அவர் சோர்வடைவதில்லை என்ற திருத்தந்தை, நாமும் அவர் கொணர்ந்த வாழ்வு, ஒளி, நம்பிக்கை, மற்றும் அன்பு எனும் செய்தியின் சாட்சிகளாக இருக்க அழைப்புப் பெற்றுள்ளோம் என்றார்.
கடவுள் நம்மோடு உள்ளார், அவரின் தெய்வீக ஒளியைப் பின்பற்றுவோம், அந்த ஒளியே தூய கன்னி மரியா மற்றும் புனித யோசேப்பின் இதயங்களை நிறைத்து வழிந்தோடியது, இடையர்களையும் கீழ்த்திசை ஞானிகளையும் வழிநடத்தியது, அவ்வொளியே இன்றும் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறது என தன் மூவேளை செபஉரையில் மேலும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.