2014-01-06 15:19:16

திருக்காட்சித் திருநாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை - இறைவனும் மனிதரும் இத்திருநாளில் சந்திக்கின்றனர்


சன.06,2014. இறைவன் மனுக்குலத்தை நாடி வருவதையும், மனிதர்கள் இறைவனை நாடிச்செல்வதையும் இணைக்கும் ஓர் அழகியத் திருநாள் இத்திருக்காட்சித் திருநாள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
சனவரி 6, இத்திங்களன்று கொண்டாடப்பட்ட திருக்காட்சிப் பெருவிழாவையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார்.
இறைவன் உலகமனைத்திற்கும் தன்னையே வெளிப்படுத்திய அழகு, திருக்காட்சித் திருநாளன்று கொண்டாடப்படுகிறது என்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டினார்.
இறைவனும் மனிதரும் இத்திருநாளில் சந்திக்கின்றனர் என்று கூறும்போது, இந்த சந்திப்பிற்கு முதல் முயற்சியை மேற்கொள்வது இறைவனே என்பதையும் நாம் உணரவேண்டும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
சனவரி 7, இச்செவ்வாயன்று கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் கீழை வழிபாட்டு முறை சபையினருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூவேளை செப உரைக்குப் பின்னர் தன் சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
கூடியிருந்த குழந்தைகளையும், இளையோரையும் சிறப்பாக வாழ்த்தியத் திருத்தந்தை, திருஅவைக்காகவும் தனக்காகவும் செபிப்பது அவர்களிடம் தான் கேட்டுக்கொள்ளும் ஒரு சிறப்பான வேண்டுகோள் என்று கூறினார்.
கூடியிருந்த அனைவருக்கும் தன் திருவிழா வாழ்த்துக்களை வெளியிட்டத் திருத்தந்தை, அவர்களுக்கு தன் அப்போஸ்தலிக்க அசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.