2014-01-04 15:32:40

மலேசியாவில் விவிலியப் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல், ஹெரால்டு ஆசிரியர்


சன.04,2014. மலேசியாவின் Selangor மாநிலத்தில் 300க்கும் அதிகமான விவிலியப் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது முழுவதும் தவறானது மற்றும் சட்டத்துக்குப் புறம்பான செயல் என்று ஹெரால்டு என்ற கத்தோலிக்க வார இதழ் ஆசிரியர் அருள்பணி லாரன்ஸ் ஆன்ட்ரூ கூறினார்.
அரசு அதிகாரிகள் கிறிஸ்தவ மையத்தில் நுழைவதற்கும், அரசியல் அமைப்புக்கு முற்றிலும் முரணாண செயல்களைச் செய்வதற்கும் அவர்களுக்கு அதிகாரம் கிடையாது எனவும் அருள்பணி லாரன்ஸ் தெரிவித்தார்.
கிறிஸ்தவக் கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல் பயன்படுத்தப்படுவதை எதிர்க்கும் நோக்கத்தில் Selangorலுள்ள மலேசிய விவிலிய மையத்திலிருந்து 321 விவிலியப் பிரதிகளைப் பறிமுதல் செய்துள்ளதோடு, இரு கிறிஸ்தவத் தலைவர்களைக் கைதுசெய்து பின்னர் பிணையலில் விடுதலை செய்துள்ளனர் அம்மாநில அரசு அதிகாரிகள்.
மலேசியாவில் அனைத்து மதத்தினரும் தங்கள் கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல்லைப் பயன்படுத்திவருகின்றனர்.
கிறிஸ்தவக் கடவுளைக் குறிப்பதற்கு அல்லா என்ற சொல் பயன்படுத்தப்படுவது குறித்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. இது குறித்த புதிய விசாரணை வருகிற பிப்ரவரி 24ம் தேதி இடம்பெறும்.
மலேசியாவில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிடப்பட்ட இலத்தீன்-மலாய் அகராதியில், விவிலியத்தில் கடவுளைக் குறிப்பதற்கு உள்ளூர் மொழியில் அல்லா என்ற சொல் பயன்படுத்தப்படுவது காட்டப்பட்டுள்ளது.

ஆதாரம் : Reuters/Asianews







All the contents on this site are copyrighted ©.