2014-01-04 15:21:38

புனிதரும் மனிதரே - புனித John Neumann


அமெரிக்காவின் பிலடெல்பியா மறைமாவட்டத்தில், ஒரு கிராம மக்கள், தங்கள் ஆயரின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். அப்போது, உரம் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு சிறு லாரி அங்கு வந்து நின்றது. அந்த லாரியின் பின்புறம் உரமூட்டைகள் அடுக்கியிருந்த பகுதியில் ஒரு பலகையின் மேல் அமர்ந்திருந்த ஆயர் இறங்கி வந்தார்.
இவர் ஆயராவதற்கு முன்னர், அருள்பணியாளராகப் பணியாற்றுகையில், ஒரு நாள் கொட்டும் மழையில் தன் பணிகளை முடித்துவிட்டு இல்லம் திரும்பினார். அந்த இல்லத்தின் கண்காணிப்பாளர் அவரிடம், "சாமி, உங்கள் காலணிகளை மாற்றிக் கொள்ளுங்கள்... அவை மிகவும் நனைந்துவிட்டன" என்று கூறினார். அதற்கு அந்த அருள்பணியாளர், "காலணிகளை மாற்றுவது என்றால், என் வலது காலணியை இடது காலிலும், இடது காலணியை வலது காலிலும் மாற்ற மட்டுமே முடியும். என்னிடம் உள்ளது இந்த ஒரு ஜோடி காலணிகள் மட்டுமே" என்று கூறினார்.
இத்தகைய எளிமையில் வாழ்ந்தவர், புனித John Neumann. 1811ம் ஆண்டு Bohemiaவில் பிறந்த இவர், அமெரிக்காவில் அருள்பணியாளராகவும், ஆயராகவும் பணியாற்றினார். அமெரிக்காவில், மறைமாவட்ட அளவில், கத்தோலிக்கப் பள்ளிகளை முதல் முதல் நிறுவியவர் இவரே. உலக மீட்பர் துறவுச் சபையைச் சேர்ந்த புனித John Neumann அவர்கள், 1860ம் ஆண்டு, சனவரி 5ம் தேதி, தனது 48வது வயதில், இறையடி சேர்ந்தார்.








All the contents on this site are copyrighted ©.