2014-01-04 15:31:57

தேர்தலுக்கு முன்னான வன்முறைகளுக்கு மத்தியில் கிறிஸ்தவர்கள் அமைதிக்காகச் செபிக்க பங்களாதேஷ் பேராயர் வேண்டுகோள்


சன.04,2014. பங்களாதேஷில் இஞ்ஞாயிறன்று நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலையொட்டி வன்முறைப் போராட்டங்களும் எதிர்ப்பு ஊர்வலங்களும் இடம்பெற்றுவரும்வேளை, அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் நாட்டின் அமைதிக்குத் தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுள்ளார் டாக்கா பேராயர் பாட்ரிக் டி ரொசாரியோ.
இப்பொதுத்தேர்தலையொட்டி Church in Need என்ற பிறரன்பு நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பேராயர் டி ரொசாரியோ, பங்களாதேஷின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் அமைதி மற்றும் ஒப்புரவுக்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளதோடு, நமது செபம் வீணாய்ப் போகாது என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்தத் தேர்தல் நேர்மையுடனும் ஒளிவுமறைவின்றியும் நடைபெறுவதை உறுதிசெய்வதற்கென, தற்காலிகப்பொறுப்பு அரசு ஒன்றை அமைக்குமாறு எதிர்க்கட்சி விடுத்த வேண்டுகோளை ஆளும்கட்சி நிராகரித்துள்ளது.
90 விழுக்காட்டு முஸ்லீம்களைக் கொண்ட பங்களாதேஷ், உலகில் ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்றாகக் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் எதிர்ப்பு வன்முறைகளில் குறைந்தது 30 வாக்குச்சாவடிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டிருப்பதாக இச்சனிக்கிழமை காலை செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.