2014-01-04 15:21:43

திருக்காட்சிப் பெருவிழா: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 சிறுவயதில் நான் பார்த்த கிறிஸ்மஸ் நாடகங்களில் எனக்குப் பிடித்த பாத்திரங்கள் யார் தெரியுமா? மூன்று இராஜாக்கள். அந்த மூன்று பேரும் பளபளப்பாய் உடை அணிந்து, தலையில் தங்க மகுடம் வைத்து வருவார்கள். சிறுவயதில் என்னை, தங்கள் ஆடம்பரத்தால் ஈர்த்த இந்த அரசர்கள், இன்று எனக்கு ஆழமான பாடங்களைச் சொல்லித்தருகிறார்கள்.
மூன்று அரசர்கள், மூவேந்தர்கள் அல்லது மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் இந்த மூவரைப்பற்றி வரலாற்றுப்பூர்வமான விவரங்கள் அதிகம் இல்லை. மத்தேயு நற்செய்தி 2ம்பிரிவில் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த மூவரும் கடந்த 20 நூற்றாண்டுகளாக பல கோடி மக்களின் மனங்களில் பல்வேறு தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள், முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணம் போதும் இவர்களுக்கு விழா எடுப்பதற்கு.

இன்று நாம் கொண்டாடும் மூன்று அரசர் அல்லது மூன்று ஞானிகள் திருநாள், இறைவன் தன்னை அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழா எனக் கொண்டாடப்படுகிறது. இறைவன் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணிவந்த யூத குலத்தவருக்கு இந்தத் திருநாளும், இதில் பொதிந்திருக்கும் உண்மையும் அதிர்ச்சியைத் தந்திருக்கும். வானதூதர்கள் வழியாக, எரியும் புதர் வழியாக தங்களுக்கு மட்டுமே தோன்றிய இறைவன், இன்று பிற இனத்தவருக்கும் தோன்றினார் என்பது அவர்களுக்கு அதிர்ச்சி. இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இந்த இறைவனைப் பங்குபோட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இந்தத் திருக்காட்சித் திருநாள்.
கடவுளின் பெயரால் பிரிவுகளையும் பிளவுகளையும் உருவாக்கும் எண்ணங்கள் இந்த புத்தாண்டில் வேரோடு களையப்பட வேண்டுமென முதலில் வேண்டிக்கொள்வோம். புலர்ந்திருக்கும் இவ்வாண்டில் இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நிகழவிருக்கின்றன. மக்களைப் பிரிப்பது ஒன்றையே தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ள அரசியல் தலைவர்கள், இறைவனையும், மதங்களையும் மூலதனமாக்கி ஓட்டு வேட்டை நடத்திவருகின்றனர். இந்த வேட்டையில் மக்கள் பலியாகாமல் இருக்கவேண்டும் என்று குறிப்பாக செபிப்போம்.

இந்த மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்திக்க வந்த இந்த நிகழ்வை, பல கோணங்களில் நாம் சிந்திக்கலாம். விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் வழி நடந்தனர் என்றும்,. இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும் நற்செய்தி சொல்கிறது. வாழ்க்கையில் நம்மை வழிநடத்தும் விண்மீன்கள் எவை என்பதைச் சிந்திக்கலாம். இறைவனைச் சந்திக்கும்போதும், சந்தித்தபின்னும் நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி சிந்திக்கலாம்.
விண்மீன்கள் என்றதும் மனதில் நட்சத்திரங்கள், ஸ்டார்கள் என்ற சொற்கள் பல எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில், முக்கியமாக, தமிழ் நாட்டில், பல ஸ்டார்களை நாம் உருவாக்கிவிட்டதால், ஸ்டார்களுக்குப் பஞ்சமில்லாமல் போய்விட்டது. ஆனால், இந்த ஸ்டார்களைச் சுற்றி வட்டமிட்டு வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கும் விட்டில் பூச்சிகளை நினைத்து வேதனையாய் இருக்கிறது.

இந்த ஞானிகளை "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்" என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. இந்த ஞானிகள் இந்தியாவிலிருந்து, ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பது ஒரு சில விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. இந்த ஞானிகள் கோள்களையும், நட்சத்திரங்களையும் ஆய்ந்து அறிந்தவர்கள்.
இந்தியாவிலும், இன்னும் பல ஆசிய நாடுகளிலும் கோள்களை, நட்சத்திரங்களை வைத்து வாழ்வின் பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப்பார்க்கலாம். ஒருவர் பிறந்த தேதியால், பிறந்த நேரத்தால் அவருக்குக் குறிக்கப்படும் நட்சத்திரம் அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதாக நம்மில் பலர் நம்பி வருகிறோம். இவ்வாறு, கோள்களும் விண்மீன்களும் நம் வாழ்வை நடத்துவதாக நம்பி, நம்மையும், நம் குடும்பங்களையும் வழிநடத்தும் பொறுப்பிலிருந்து நாம் விலகிப் போகிறோமா என்ற கேள்விக்கு விடை தேடுவது பயனளிக்கும்.
திரைப்படங்கள், விளையாட்டு, அரசியல் ஆகிய உலகங்களில் உருவாகும் 'ஸ்டார்களையும்', நம் ஜாதகத்தில், கைரேகைகளில் பதிந்துவிட்ட 'நட்சத்திரங்களையும்' நம்பி வாழாமல், நல்வழிகாட்டும் இலட்சியங்கள் என்ற விண்மீன்களை நாம் பின்பற்ற வேண்டும் என்பது, இந்த விழா நமக்குச் சொல்லித் தரும் ஓர் அழகிய பாடம்.

வானில் தோன்றிய ஒரு விண்மீனை தங்கள் எண்ணங்களிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த ஞானிகள் தங்கள் வழக்கமான வாழ்வைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அந்த விண்மீனைத் தொடரத் தீர்மானித்தனர். அவர்களது தீர்மானத்தைக் கேட்டதும் அவரது குடும்பத்தினர், உறவினர், ஊர்மக்கள் அவர்களைக் கேள்விகேட்டு வதைத்திருக்கலாம். கேலி செய்திருக்கலாம். அவர்களது கேள்விகளும், கேலிகளும் இம்மூன்று ஞானிகளின் உறுதியைக் குறைக்கவில்லை. விண்மீனைத் தொடர்ந்தனர்.
விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே இந்த ஞானிகள் இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். போக்குவரத்து வசதிகள் ஏதுமற்ற அக்காலத்தில், இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்லவே. அதுவும் தூரத்தில் தெரியும் ஒரு சிறு விண்மீனை, பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்லவே. பல இரவுகளில் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்நேரங்களில் மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து மீண்டும் விண்மீனைப் பார்த்து அவர்கள் நடந்திருக்க வேண்டும். இத்தனை இடர்பாடுகள் மத்தியிலும் ஒரே குறிக்கோளுடன் பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.

நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது மிகவும் அரிது. வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? கருமேகம் சூழும்போது, "ஒருவேளை மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம். அதேபோல், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும் போதும் மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம்... கடவுள் என்ற ஒருவர் அங்கிருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள.
சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின் கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் கொடுக்கும் அழைப்பும் தெரியாது. கருமேகங்களைத் தாண்டி விண்மீன்களைப் பார்ப்பதற்கு நமக்கு வெறும் உடல் கண்கள் பயனற்றவை. இதயக் கண்கள், மனக் கண்கள் தேவை.

அன்பு மருத்துவர் அல்லது காதல் மருத்துவர் (Dr Love) என்று புகழ்பெற்ற லியோ புஸ்காலியா (Leo Buscaglia) என்ற ஓரு பேராசிரியர் சொன்ன ஒரு கதை இது: அவர் தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணிசெய்தபோது, அவரிடம் ஜோயல் என்ற மாணவர் படித்துவந்தார். மிகச்சிறந்த அறிவும், பல்வேறு திறமைகளும் கொண்டவர் ஜோயல். பாரம்பரியம்மிக்க யூத குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், கடவுளையும், யூத மத நியதிகளையும் விட்டு வெகுதூரம் விலகிச்சென்றார் ஜோயல். ஏன் வாழ்கிறோம் என்பது தெரியாமல் குழம்பிப் போன அவர், ஒருநாள் தன் வாழ்வை முடித்துக்கொள்ள தீர்மானித்தார்.
தான் சாவதற்கு முன், தன் அபிமான ஆசிரியர் லியோ புஸ்காலியாவைப் சந்திக்கச் சென்றார். தான் எடுத்திருந்த முடிவை அவரிடம் சொன்னார். "உன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு முன், நமது பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வயது முதிர்ந்தோர் இல்லத்திற்குச் சென்று வா" என்றார் லியோ. தன் அபிமான ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை ஜோயல் புரிந்துகொள்ளவில்லை. எனவே, லியோ விளக்கினார். "நீ உன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு முன், வாழ்வு என்றால் என்ன என்பதை உன் இதயக் கண்கள் கொண்டு நீ பார்க்கவேண்டும்." "இதயக் கண்களா?" என்று ஜோயல் அழுத்திக் கேட்டதும், லியோ மேலும் விளக்க ஆரம்பித்தார். "வாழ்க்கையின் அர்த்தமுள்ள தொடர்புகளையெல்லாம் இழந்து, அந்த முதியோர் இல்லத்தில் வாழ்வோருக்கு உன்னால் என்ன தரமுடியும் என்பதைச் சிந்தித்துப்பார். அங்குள்ளவர்களில் யார் எந்த ஓர் உறவினரும் வராமல் பல மாதங்கள் அல்லது வருடங்கள் காத்திருக்கிறார்களோ அவர்களைச் சென்று பார்." என்று லியோ சொன்னதும், ஜோயல், "அவர்களிடம் என்ன சொல்லவேண்டும்?" என்று கேட்டார். "என்ன சொல்ல வேண்டும் என்று நீயே தீர்மானித்துக் கொள்.. ஆனால், அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை, நம்பிக்கையை உண்டாக்கும் எதையாவது சொல்" என்று சொல்லி அனுப்பினார். பிறருக்குக் கொடுப்பதன் வழியாக நாம் வாழ்வில் அர்த்தத்தைப் பெற முடியும் என்பதே லியோ கொடுத்த இந்த ஆலோசனையில் பொதிந்திருந்த இரகசியம்.
இந்தச் சந்திப்பிற்குப் பின், ஜோயலுக்கு என்ன ஆயிற்று என்பதை லியோ புஸ்காலியா மறந்துவிட்டார். ஒரு நாள், அவர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டிக்குப் போய்கொண்டிருந்தபோது, ஜோயல் ஒரு பேருந்தில் வந்து இறங்கினார். அவருடன் முதியோர் இல்லத்திலிருந்து பத்து அல்லது பதினைந்து பேர் இறங்கினர். ஜோயல் தன் ஆசிரியர் லியோவிடம் வந்தார். "சார், இவர்கள் கால்பந்தாட்டப் போட்டியை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாம். எனவேதான் அவர்களை அழைத்து வந்துள்ளேன்." என்று சொன்னார். சிறிது தூரம் சென்றபின், லியோவின் கைகளைப் பிடித்தபடி ஜோயல் பேசினார்: "என் இதயத்தின் கண்களைத் திறந்து மற்றவர் தேவைகளை எனக்குச் சொல்லித் தந்தீர்கள். மிக்க நன்றி." என்று சொன்னார். விரக்தியால் வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட ஜோயல், அடுத்தவருக்கு உதவவேண்டும் என்ற விண்மீன் கொடுத்த அழைப்பை ஏற்றதால், அவரது வாழ்வு முற்றிலும் மாறியது.

இதயத்தின் கண்களைத் திறந்து பார்த்தால், இந்த உலகில் பல அதிசயங்களைப் பார்க்கலாம். அந்த அதிசயங்களின் ஊற்றான இறைவனையும் பார்க்கலாம். இதைத்தான் கீழ்த்திசை ஞானிகள் மூவர் இன்று நமக்குச் சொல்லித் தருகின்றனர்.
உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்று, இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப்போல் எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தடைகள் பல எழுந்தாலும், தளராமல் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு இப்புத்தாண்டின் துவக்கத்தில் நமக்கும் மனஉறுதியைத் தந்து, இறைவன் வழி நடத்த வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.