2014-01-04 15:33:00

சூரியனை ஆராய செயற்கைகோள்: இந்திய அறிவியலாளர்


சன.04,2014. மங்கள்யான் செயற்கைகோளைத் தொடர்ந்து சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக ஆதித்யா என்ற செயற்கைகோள் ஏவப்பட உள்ளதாகவும், இதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ அறிவியலாளரும், மங்கள்யான் திட்டக்குழுத் தலைவருமான மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளில் இத்திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட மயில்சாமி அண்ணாத்துரை இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், சூரியன் பற்றி ஆராய்வதற்காக நவீன செயற்கைகோள் ஒன்றை 2013ம் ஆண்டு ஜூன் 29ம் தேதியன்று அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் ஏவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு கோள்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, நாசா ஆய்வு மையம் விண்கலங்களை அனுப்பியுள்ளது.
இந்த வகையில் சூரியனின் கீழ்ப் பகுதி பற்றி ஆராய, ஐ.ஆர்.ஐ.எஸ் வகையைச் சேர்ந்த செயற்கைக்கோளை கலிபோர்னியாவிலிருந்து, பிகாசஸ் ராக்கெட் மூலம் நாசா ஏவியது.
சூரியனைப் பற்றி ஆய்வு நடத்துவதற்காக ஏறக்குறைய 1,100 கோடி ரூபாய் செலவில் இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டு விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆதாரம் : செய்தி நிறுவனங்கள்







All the contents on this site are copyrighted ©.