2014-01-03 14:57:04

சன. 04,2014. புனிதரும் மனிதரே. - நானும் நோயாளிதான்


வின்சென்ட் என்றொரு மனிதர் தன் 80 ஆண்டுகால வாழ்க்கையில் பாதிக்கும் மேற்பட்டதை நோயாளிகளுடனும் ஏழைகளுடனும் செலவிட்டவர். 52ம் வயதில் இவரால் நடக்கமுடியாமல் போனது. குதிரையில் பயணம் செய்தார். 69ம் வயதில் குதிரையில் உட்காரமுடியவில்லை. குதிரைவண்டியில் சென்று நோயாளிகளைச் சந்தித்தார். 79ம் வயதில் மரக்கட்டைகளின் துணையின்றி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு அவரால் செல்ல முடியாது. இவர் இறப்பதற்கு முந்தைய இறுதி 4 ஆண்டுகள் பசி என்பதே இவருக்கு இல்லாமல் போய்விட்டது. கடைசி மூன்றாண்டுகள் கண்பார்வை பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் குதிரை வண்டி விபத்தில் தலையில் பலத்த காயம். கடைசி இரண்டு ஆண்டுகள் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டார். இவ்வாறு எண்ணற்ற துன்பங்களை அனுபவித்த இவர், ஒரு நாள் தன் துறவுமடத்தில் காய்ச்சலைத் தாங்கமுடியாமல் அழுதுகொண்டிருந்த உடன் சகோதரனைப் பார்த்து, ' நானும் இளைஞனாக இருந்தபோது உன்னைப்போல் எனக்கும் நோய் இருந்தது. இப்போது பார், சரியாகிவிட்டது. எனக்கு ஆஸ்துமாவும், குடற்சரிவு நோயும் இருந்தது. கடவுள் குணப்படுத்தினார். நரம்புவலி நோய், நுரையீரல் பிரச்னை, வயிற்றுப் பலவீனம் என எத்தனையோ நோய்கள் இருந்தன. அனைத்தையும் தாண்டி இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். உன்னுடைய சேவை தேவையெனில் இறைவன் உன்னையும் குணப்படுத்திக் காப்பாற்றுவார்' என்று ஆறுதல்படுத்தினார். நோயால் பெரும் துன்பங்களை அனுபவித்தாலும் அதை வெளியே ஒருநாளும் காட்டிக்கொண்டதில்லை வின்சென்ட். ஒருமுறை தன் நண்பனுக்கு எழுதினார், 'நீயும் கவலைப்படுவாய் என்பதால் இதுவரை என் துன்பங்கள் குறித்து உனக்கு நான் எழுதவில்லை. வேதனைகளைத் தாங்கமுடியாமல் நான் முறுமுறுத்தால், இறுதிநாளில் கடவுளின்முன் சென்று நிற்கும்போது அவருக்கு என்ன பதில் சொல்வேன்?' என்று.
இவர்தான் பிரானஸ் நாட்டைச்சேர்ந்த புனித வின்சென்ட் தெ பால்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.