2014-01-02 15:49:59

தமிழகத்தில் புத்தாண்டு நாளன்று ரூ.250 கோடி மதுவிற்பனை


சன.02,2014. தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் ரூ.250 கோடி அளவுக்கு டாஸ்மாக் மதுவிற்பனை நடந்துள்ளது.
இந்த புத்தாண்டுக்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமை (டிச.31) மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.135 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. இதுபோல், புத்தாண்டு தினமான புதன்கிழமை மாலை நிலவரப்படி மது விற்பனை ரூ.120 கோடியைத் தொட்டது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமான நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.75 கோடிக்கும், வார இறுதி நாள்களில் ரூ.90 கோடி அளவுக்கும் மது விற்பனை ஆகிறது என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தாண்டுக்கென மதுவிற்பனைக்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கவில்லையெனினும், எதிர்பார்த்தபடி இந்த ஆண்டு ரூ.250 கோடி அளவுக்கு விற்பனை ஆகியுள்ளது என்றும், கடந்த புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களின்போது ரூ.200 கோடியும் பொங்கல் பண்டிகையின்போது ரூ.300 கோடியும் தீபாவளியின்போது ரூ.300 கோடிக்கு அதிகமாகவும் விற்பனை ஆனது என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பண்டிக்கைக்கால கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருவது கவலை தரும் செயலாகும் என்றும், எப்போதாவது ஒரு முறை மது அருந்துவோர் கூட, பண்டிகைக் காலங்களில் நண்பர்களுடன் மதுஅருந்துவதாலேயே மது விற்பனை அதிகரிக்கிறது என்றும் 'தி இந்து' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.