2014-01-01 13:55:41

ஆண்டின் இறுதி நாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய Te Deum சிறப்புச் செய்தி


சன.01,2014. 'இதுவே கடைசி காலம் என தூய யோவான் தன் முதல் திருமுகம் 2ம் பிரிவில் எழுதியுள்ளார். இறைவன் வரலாற்றில் வரும் இறுதி காலத்தில் நாம் உள்ளோம் என்பதை இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. இந்த கடைசிக் காலத்திற்குப் பின் வரும் அடுத்த படி என்பது இயேசுவின் இறுதி வருகையாகும். நாம் இங்கு பேசுவது காலத்தின் அளவைப் பற்றியல்ல, மாறாக அதன் தரத்தைப்பற்றியது. காலம் நிறைவுற்றபோது அதாவது, மீட்பின் காலம் முழுமைபெற்றபோது இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இதே கண்ணோட்டத்தில் பார்க்கும்போது நாம் கடைசி காலத்தில் உள்ளோம் எனலாம். நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் கடைசி காலமே. இன்று நாம் அவருக்கு வழங்கும் பதில், நம் வருங்காலத்தைப் பாதிக்கின்றது. காலம் மற்றும் வரலாறு பற்றிய விவிலிய கண்ணோட்டமும், நம் புரிந்துகொள்ளுதலும், ஓர் இலக்கை, முடிவை நோக்கி இட்டுச்செல்லும் பாதையைப்பற்றியதாகும். ஆகவே, ஓர் ஆண்டு முடிந்துள்ளது என்பது ஓர் உண்மைத்தன்மையின் முழுமையைக் குறிக்கவில்லை, மாறாக நம் இலக்கை நோக்கி ஓரடி முன்னெடுத்து வைப்பதையேக் குறிக்கிறது. 2013ம் ஆண்டு முடிவுக்கு வரும் இவ்வேளையில், கடந்துள்ள நாட்களை, வாரங்களை, மாதங்களை ஒரு கூடையில் சேகரித்து இறைவனிடம் சமர்ப்பிப்போம். நாம் எப்படி வாழ்ந்தோம்? நமக்காகவா? பிறருக்காகவா? இறைவனோடு இணைந்திருக்க எவ்வளவு நேரத்தைச் செலவிட்டோம்? நம் வாழ்வின் தரம் என்ன?
உரோம் நகரை எடுத்துக்கொண்டால் அதன் மொசைக் தரையின் ஒவ்வொரு சிறு சதுரமாக அந்நகர் மக்கள் ஒவ்வொருவரும் உள்ளனர். உரோம் நகரம் தனக்கேயுரிய அழகையும் கலாச்சார பாரம்பரியத்தையும் உடையது. இங்கும் ஏழ்மையும் துன்பங்களும் உள்ளன. ஆகவே, இங்குள்ள அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமக்களின் மனச்சான்றிற்கும் அழைப்பொன்றை விடுக்கிறேன். இங்கு சுற்றுலாப்பயணிகளும் நிறைந்துள்ளனர், அதேவேளை அகதிகளும் குவிந்துள்ளனர். இங்கு வாழும் அனைவரும் அவர்களுக்கேயுரிய மனித மாண்புடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இன்று ஆண்டின் கடைசி நாள். வரும் ஆண்டில் இந்த நகரை மேலும் சிறப்புடையதாக்க நாம் என்னச் செய்யப்போகிறோம்? நாம் ஒருமைப்பாட்டுணர்வுடனும் தாராளமனதுடனும் பணியாற்ற முன்வந்தால், இது மனிதாபிமானம் நிறைந்ததாக, நட்புணர்வுடன் கூடியதாக மாறும். இவ்வேளையில் உரோம் தலத்திருஅவை இறை இரக்கத்தின் கருவியாக, இந்நகரின் வருங்கால வாழ்வுக்கு தன்னையே அர்ப்பணித்து, தன் பங்கையாற்ற ஆவல் கொள்கிறது.
இன்றிரவு நாம் இறைவனிடம் மன்னிப்பை வேண்டி அவருக்கு நன்றி நவின்று 2013ம் ஆண்டை நிறைவுச்செய்கின்றோம். அவர் நமக்கு வழங்கியுள்ள அனைத்து கொடைகளுக்காக, நன்றிகூறுவோம். இறைவனின் தாயின் பெயரால் நாளை நாம் துவக்கவிருக்கும் இவ்வுலகப்பயணத்தின் புதிய அத்தியாயத்தில், ஒவ்வோர் ஆண்டையும், மாதத்தையும், நாளையும் முடிவற்ற அன்பால் நிறைக்கும் மனுமகனை வரவேற்க அத்தாய் நமக்கு கற்றுத்தருவாராக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.