2013-12-30 15:11:45

கற்றனைத்தூறும்......வெள்ளிக் கோள்


நமது பூமியின் இரு புறத்திலும் அமைந்திருப்பது செவ்வாய், வெள்ளி கோள்களாகும். இதில் பூமிக்கு மிக அருகில் அமைந்திருப்பது வெள்ளிக் கோள்தான். அன்பு மற்றும் அழகுக்கான உரோமானியக் கடவுளின் பெயரில் இக் கோளுக்கு `வீனஸ்' என்று பெயரிடப்பட்டது. சூரியன், நிலாஇவற்றுக்குப் பிறகு வெள்ளி மிகுந்த ஒளியுடன் சுடர்விடும் கோள் ஆகும். சூரிய உதயம், சூரியன் மறைவு ஆகிய இரண்டு வேளைகளிலும் வெள்ளிக் கோளைக் காண முடியும். விண்ணியல் ஆய்வாளர்கள் ஒரு காலத்தில் வெள்ளியும் பூமியும் இரட்டைப்பிறவி என்று கருதினார்கள். ஏனெனில் வெள்ளியின் குறுக்களவு ஏறக்குறைய பூமியை ஒத்திருக்கிறது. அதாவது இதன் குறுக்களவு, பூமியைவிட 650 கிலோ மீட்டர்கள்தான் குறைவு. பூமியுடன் ஒப்பிடுகையில் வெள்ளிக் கோள் 81.5 விழுக்காடு நிறை கொண்டது. ஆனால், இதைத் தவிர பூமிக்கும், வெள்ளிக்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. வெள்ளிக் கோளின் புறவெளி மிகவும் வேறுபாடானது. இது 95 விழுக்காடு கரியமில வாயுவால் சூழப்பட்டுள்ளது. அதுதவிர, அடர்த்தியான கந்தக அமில மேகங்களால் சூழப்பட்டுள்ளது. அதுவே வெள்ளியின் உட்பரப்பைக் காணத் தடையாக உள்ளது. இந்த மேகங்கள் சூரிய ஒளியின் 76 விழுக்காட்டைப் பிரதிபலிப்பதால் வெள்ளி மிகுந்த ஒளியுடன் விளங்கும் கோளாகத் தோன்றுகிறது. சூரியக் குடும்பத்திலேயே மிகவும் சூடான கோளாகும் இது. அதாவது இது, புதன் கோளைவிட இரு மடங்கு வெப்பமானது. இத்தனைக்கும் சூரியனிலிருந்து புதனைப்போல இருமடங்கு தொலைவில் வெள்ளி அமைந்துள்ளது. சூரியனின் வெப்பம், வெள்ளிக் கோளுக்குள் கரியமில வாயுவால் தக்க வைக்கப்படுவதுதான் அதிக வெப்பத்திற்குக் காரணம். வெள்ளியில் சாதாரணமாக நிலவும் தட்பவெப்ப நிலையான 460 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் காரீயம்கூட உருகிவிடும். இக்கோளில் காணப்படும் புறவெளி அழுத்தமும் மிக அதிகமானது. அதாவது கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் நீந்துவது போன்ற அழுத்தம் இங்கு நிலப்பரப்பில் காணப்படுகிறது. மிகுந்த ஒளியுடனும் அழகாகவும் இருக்கும் வெள்ளிக் கோள் பார்த்து இரசிக்கத்தான் உகந்தது. அங்குச் சென்று மனிதர்கள் வாழ்வதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க இயலாது.

ஆதாரம் : webdunia.com







All the contents on this site are copyrighted ©.