2013-12-28 15:35:59

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சகோதரத்துவத்துக்கான அழைப்பு, மியான்மாரில் அமைதி ஏற்படுவதற்கு ஒரே வழி


டிச.28,2013. புதிய ஆண்டைக் காண்பதற்காக உலகில் தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், சுதந்திரம், சனநாயகம், நீதி, அமைதி, நம்பிக்கை, சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளால் அமையப்பெற்ற புதிய சகாப்தம் உருவாவதற்கு, மியான்மார் தயாரித்து வருகிறது என்று அந்நாட்டு பேராயர் ஒருவர் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு சனவரி முதல் நாளன்று கத்தோலிக்கர் கடைப்பிடிக்கும் உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி, மியான்மார் கத்தோலிக்கருக்கு நம்பிக்கையையும் ஒன்றிப்பையும் ஊக்குவிக்கின்றது என்று கூறியுள்ளார் யாங்கூன் பேராயர் Charles Bo.
கடந்த ஈராண்டளவாக மியான்மாரில் இடம்பெற்றுவரும் சனநாயகச் சுதந்திரத்துக்கு ஆதரவான நடவடிக்கைகள், இன்னும், அந்நாட்டில் இடம்பெற்றுவரும் பெரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் மூலம் அந்நாடு உலகுக்குத் தனது கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் பேராயர் Bo.
மியான்மார் மக்களில் குறைந்தது 40 விழுக்காட்டினர் வறுமையில் வாடுவதாகவும், மலேசியாவிலும் தாய்லாந்திலும் வாழும் இலட்சக்கணக்கான மியான்மார் குடியேற்றதாரரின் நிலை கவலைதருவதாக உள்ளது எனவும் கூறிய பேராயர் Bo, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சகோதரத்துவத்துக்கான அழைப்பு, மியான்மாரில் அமைதி ஏற்படுவதற்கு ஒரே வழியாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.