2013-12-28 15:13:22

திருக்குடும்பத் திருவிழா - ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 இவ்வாண்டு அக்டோபர் 26ம் தேதி மாலையில் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்தது. அண்மையில் நாம் நிறைவு செய்த நம்பிக்கை ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக அக்டோபர் 26, 27 ஆகிய இரு நாட்கள், வத்திக்கானில் 'அகில உலகக் குடும்ப நாள்' கொண்டாடப்பட்டது. அக்டோபர் 26 மாலை நடைபெற்ற செப வழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சுற்றி, சுற்றி வந்து, இறுதியில் அவர் இருக்கையில் ஏறி அமர்ந்த ஒரு சிறுவனைப் பற்றிய வீடியோ, பல கோடி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
அந்த மாலை வழிபாட்டின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமர்ந்திருந்த மேடையைச் சுற்றி பல சிறுவர், சிறுமியர் அமர்ந்திருந்தனர். அச்சிறுவர்களில் ஒருவன் 'கார்லோஸ்' என்றழைக்கப்பட்ட இச்சிறுவன். கொலம்பியா நாட்டில் பிறந்த கார்லோஸ், பெற்றோரை இழந்தவன். உரோம் நகரில் ஓர் இத்தாலியக் குடும்பத்தில் இவன் தற்போது வளர்ந்து வருகிறான். கார்லோஸ், அறிவுத்திறன் வளர்ச்சியில் சிறிது பின்தங்கியவன் என்று சொல்லப்படுகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறுவன் கார்லோஸ் உடன் செலவிட்ட அந்தக் கனிவான மணித்துளிகள் ஊடகங்களில் இன்னும் பேசப்படுகின்றன.
இந்நிகழ்வைப்பற்றி நான் ஒரு சிலரோடு பேசிக்கொண்டிருந்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சுற்றி குழந்தைகள் அமர்ந்திருந்த அந்தக் காட்சியை ஓர் உருவகமாகக் குறிப்பிட்டேன். மாலை குடும்பச் செபத்தை குடும்பத்தின் பெரியவர் தன் வீட்டுத் திண்ணையில் நடத்தும்போது, அக்குடும்பத்தின் பேரக் குழந்தைகளும், அந்தத் தெருவில் வாழும் குழந்தைகளும் பெரியவரைச் சுற்றி அமர்ந்து செபித்தால் எவ்வாறு இருக்குமோ அப்படி அமைந்தது அந்தக் காட்சி. தாத்தாவைச் சுற்றிப் பேரக் குழந்தைகள் அமர்ந்திருந்தனரென்று நான் சொன்னபோது, ஒரு சிலர் ஆச்சரியம் அடைந்தனர், ஒரு சிலர் அதிர்ச்சியும் அடைந்தனர் என்றே சொல்லவேண்டும். திருத்தந்தையை நான் தாத்தா என்று உருவகப்படுத்தியது பலருக்கு அதிர்ச்சியைத் தரலாம். ஆனால், அது ஓர் உண்மையான, எதார்த்தமான உருவகமாக எனக்குத் தெரிகிறது. அக்குழந்தைகளில் ஒருவர், திருத்தந்தையை, 'தாத்தா' என்று அழைத்திருந்தால் அவர் அதை மகிழ்வுடன் அங்கீகரித்திருப்பார். அப்பேரக் குழந்தைகளில் ஒருவன் - அறிவுத்திறன் வளர்ச்சி குன்றிய பேரன், கார்லோஸ் - தாத்தா பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட கவனத்தையும், கனிவையும் பெற்றான். அச்சிறுவனுடைய வளர்ப்புத்தாய் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "திருத்தந்தையிடமிருந்து என் மகன் பெற்ற அசீர், அவனுக்கு மட்டும் கிடைத்த ஆசீர் அல்ல. ஆதரவு ஏதுமின்றி உலகில் விடப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் திருத்தந்தையின் ஆசீர் அன்று கிடைத்தது என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்" என்று கூறினார். கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடிய உலகக் குடும்ப நாளுக்கு இதைவிடச் சிறந்த ஒரு செய்தியை, ஓர் உண்மையை பறைசாற்றியிருக்க முடியாது. நாம் இன்று, டிசம்பர் 29, ஞாயிறன்று கொண்டாடும் திருக்குடும்பத் திருவிழா, அக்டோபர் 26, 27 ஆகிய இரு நாள்களில் வத்திக்கானில் ஏற்கனவே கொண்டாடப்பட்டுவிட்டது.

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் முதல் ஞாயிறு, திருக்குடும்பத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்து பிறப்பு என்ற பெரும் மறையுண்மையைக் கொண்டாடிய கையோடு, திருக்குடும்பத் திருவிழாவை, திருஅவை கொண்டாடுவது ஓர் ஆழமான பாடத்தை மனதில் பதிக்கிறது. அதாவது, பல உயர்ந்த உண்மைகளை உலகில் நிலைநிறுத்த அடித்தளமாக அமைவது குடும்பமே என்பதுதான் அந்தப் பாடம். குடும்பங்கள் இல்லையேல் இவ்வுலகில் உண்மைகள் உறங்கிவிடும், உன்னதம் உருபெறாமல் போகும்.

கிறிஸ்மஸ் காலம் குடும்ப உணர்வை வளர்க்கும் ஓர் அழகிய காலம். ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்மஸ், புத்தாண்டையொட்டி, வத்திக்கான் வானொலிக்கு நேயர்களின் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன, எங்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்ல. இவ்விதம் கிறிஸ்மஸுக்கு வாழ்த்துக்களைச் சொல்ல வந்த ஒரு நேயர், அதோடு தன் மனக்குமுறலையும் சேர்த்துப் பேசினார். அவர் தாய்நாட்டிலிருந்து வெளி நாட்டுக்குச் சென்று பணிபுரிந்து கொண்டிருப்பவர். கடந்த 12 ஆண்டுகளாய் கிறிஸ்மஸுக்கு தாய்நாட்டுக்குப் போக முடியவில்லையே என்ற தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினார். "Father, கிறிஸ்மஸ் நேரத்துல ஊர்ல எல்லாரும் சேர்ந்திருப்பாங்க. சொந்தக்காரங்க வீடெல்லாம் பக்கத்திலேயே இருக்குது. எல்லாரும் சேர்ந்திருக்கும்போது, நான் அவங்களை telephoneல கூப்பிடுவேன். 30,40 நிமிடங்கள் எல்லார்கிட்டேயும் பேசுவேன். அதுதான் எனக்குக் கிறிஸ்மஸ்" என்றார். கேட்பதற்குக் கொஞ்சம் கடினமானச் சூழல்தான். ஆனால், இன்றைய உலகில் பலரும் எதிர்கொள்ளும் எதார்த்தம் இதுதானே.
குடும்ப உணர்வை வளர்க்கும் கிறிஸ்மஸ் காலம், குடும்பமாகக் கூடி வாழ முடியாத நிலையையும் நமக்கு நினைவுருத்துகிறது. கிறிஸ்மஸைக் கொண்டாடமுடியாமல் தவிக்கும் குடும்பங்கள், திருக்குடும்பத்திலிருந்து ஆறுதல் பெறமுடியும். யோசேப்பும் மரியாவும் குழந்தை இயேசுவுடன் முதல் கிறிஸ்மஸைக் கொண்டாடியதாகத் தெரியவில்லை. கொண்டாட்டங்களைவிட, கொடுமைகளையே அவர்கள் அதிகம் அனுபவித்தனர் என்பதுதான் உண்மை. முதல் கிறிஸ்மஸ் நேரத்தில் நடந்த ஒரு சங்கடமான நிகழ்வு இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது.

இந்த நற்செய்தியிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு முன்னதாக, திருக்குடும்ப திருவிழா திருஅவையில் ஆரம்பிக்கப்பட்ட சூழ்நிலை, காரணம் ஆகிய எண்ணங்களை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை திருக்குடும்பத் திருநாள் தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக சில துறவற சபைகளால் பரப்பப்பட்டு வந்தது. 1921ம் ஆண்டு திருஅவை இந்த பக்தி முயற்சியை ஒரு திருநாளாக மாற்றியது. காரணம் என்ன? அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ல் நடந்து முடிந்த உலகப்போரின் இறுதியில், ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத்தலைவனையோ, மகனையோ போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள் பல இன்னல்களைச் சந்தித்துவந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில் திருக்குடும்பத் திருவிழாவையும், குடும்பங்களில் பக்தி முயற்சிகளையும் திருஅவை வளர்த்தது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது (1962-65) மீண்டும் திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களைத் திருஅவை புதுப்பித்தது. காரணம் என்ன? இரண்டு உலகப் போர்கள் முடிவடைந்தபின், வேறு பல வகைகளில் மக்கள் தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று பல வழிகளில் உலகம் முன்னேறியதைப்போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, பல அடிப்படை நியதிகள் மாறிவந்தன. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள் வீட்டுக்கு வெளியே அன்பை, நிம்மதியைத் தேடியபோது, அந்த அன்பையும், நிம்மதியையும் வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச்சொன்னது திருஅவை. கிறிஸ்மஸுக்கு அடுத்த ஞாயிறை, திருக்குடும்பத் திருவிழாவாக 1969ம் ஆண்டு அறிவித்த திருஅவை, அக்குடும்பத்தை நமக்கு எடுத்துக்காட்டாகவும் கொடுத்தது.

திருக்குடும்பம் ஒரு தலைசிறந்த குடும்பம். அக்குடும்பத்தில் வாழ்ந்த இயேசு, மரியா, யோசேப்பு அனைவரும் தெய்வீகப் பிறவிகள். அவர்களைப் பீடங்களில் ஏற்றி வணங்கமுடியும். அவர்களை வைத்து விழாக்கள் கொண்டாடமுடியும். ஆனால், அந்தக் குடும்பத்தைப்போல் வாழ்வதென்றால்?... நடக்கக்கூடிய காரியமா? இக்கேள்வி எழுவதற்குக் காரணம்... இவர்களை நாம் தெய்வீகப் பிறவிகளாக மட்டும் பார்க்கும் ஒருதலை பட்சமான கண்ணோட்டம்.
இயேசு, மரியா, யோசேப்பு என்ற இக்குடும்பம் எந்நேரமும் செபம் செய்துகொண்டு, இறைவனைப் புகழ்ந்துகொண்டு, எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்ததாக நினைக்கவேண்டாம். அவர்கள் மத்தியிலும் பிரச்சனைகள் இருந்தன. அவர்கள் அந்தப் பிரச்சனைகளைச் சந்தித்த விதம், அவற்றிற்கு விடைகள் தேடிய விதம் இவை நமக்குப் பாடங்களாக அமையவேண்டும். புலம்பெயர்ந்து செல்லும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுதல் என்பது இன்றைய உலகில பெரும்பாலான குடும்பங்கள் சந்தித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சனை. இதே பிரச்சனையைத் திருக்குடும்பம் சந்தித்ததாக இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது.

அதிகார வெறியினால் பச்சிளம் குழந்தைகளையும் தன் எதிரிகள் என்று எண்ணி, அவர்களைக் கொன்று குவித்த ஏரோதின் வாளுக்குப் பலியாகாமல், குழந்தை இயேசுவையும் மரியாவையும் கூட்டிக்கொண்டு, இரவோடு இரவாக பழக்கமில்லாத ஒரு நாட்டுக்குச் செல்லும்படி வானதூதர் யோசேப்பைப் பணிக்கிறார். ஏரோது இறந்தபின், மீண்டும் யோசேப்பு தன் தாய்நாடு திரும்புவதற்குப் பணிக்கப்படுகிறார். இந்நிகழ்வுகளை இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். இதை நற்செய்தி என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது. அதிகாரத்தில் உள்ள தனி மனிதர்களின் கட்டுக்கடங்காத வேட்கைகள் வெறியாக மாறும்போது, பலகோடி அப்பாவி மக்கள் பலியாகின்றனர் என்பதை நற்செய்தியும், வரலாறும் நமக்கு மீண்டும், மீண்டும் சொல்கின்றன.
அதேபோல், அரசியல், மதம், மொழி, நிறம், இனம், சாதி என்ற பல காரணங்களால் மோதல்கள் உருவாகும்போது, இப்பிரிவுகளால் பாதிக்கப்படாமல், எளிய வாழ்வு நடத்தும் அப்பாவி மக்கள் தங்கள் பிறந்த மண்ணை விட்டு வெளியேற்றப்படும் அவலம் மனித வரலாற்றில் தொடர்கதையாகி வருகிறது. நாடுவிட்டு நாடு செல்லும் குடும்பங்கள், நாட்டிற்குள்ளேயே அகதிகளாக வாழவேண்டிய கொடுமைக்கு உள்ளாக்கப்படும் குடும்பங்கள் அனைத்தையும் இந்நேரத்தில் நினைவுகூர்ந்து, இறைவனிடம் நாம் மனமுருகி வேண்டுவோம்.

நாடுவிட்டு நாடு செல்லும்போது அன்னியர்களாக உணர்வது இயற்கைதான். ஆனால், வீட்டுக்குள், குடும்பத்திற்குள், நான்கு சுவர்களுக்குள் அன்னியரைப் போல் உணரக்கூடிய போக்கு இன்று நம்மிடையே பெருகிவருகிறது என்பதை நாம் வேதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, வயதில் முதிர்ந்த பெற்றோரை தேவையற்றவர்களாக அன்னியரைப் போல் நடத்தும் கொடுமை பல குடும்பங்களில் நிகழ்கிறதே! இந்தப் போக்கினை இன்று எண்ணிப் பார்க்க நமது வாசகங்கள் அழைக்கின்றன. சீராக்கின் ஞானம் கூறும் வார்த்தைகள் ஆசீரளிக்கும் வார்த்தைகளாகவும், எச்சரிக்கை தரும் வார்த்தைகளாகவும் அமைந்துள்ளன.
சீராக்கின் ஞானம் 3: 3-4, 12-14
தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்.... குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு: அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி: நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே. தந்தைக்குக்காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும்.
பெற்றோரை விட பணமே பெரிதென வாழ்வோருக்கு இறைவன் நல்வழி காட்டவேண்டும் என்று மன்றாடுவோம்.

இத்தாலியின் தென் முனையில் அமைந்துள்ள லாம்பதுசா என்ற தீவை நோக்கி, அளவுக்கு அதிகமாக அகதிகளை ஏற்றிக்கொண்டு வரும் படகுகள் பல கடலில் மூழ்கி உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளன. இந்தத் துயரமான விபத்துக்களில் இறந்தோருக்கென திருப்பலியாற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு ஜூலை 8ம் தேதி அங்கு சென்றிருந்தார். அப்போது அவர் சொன்ன ஒரு சொற்றொடர் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் பயன்படுத்திய சொற்றொடர் – “Globalisation of indifference”. இன்றைய உலகில், அடுத்தவரைப் பற்றிய அக்கறையின்மை உலகமயமாக்கப்பட்டு வருகிறது என்று திருத்தந்தை வேதனையுடன் கூறினார்.
உலக மயமாக்கப்பட்டுள்ள அக்கறையின்மை தற்போது குடும்பங்களுக்குள்ளும் பரவியுள்ளது. இதற்கு மாற்றாக, திருத்தூதர் புனித பவுல் அடியார் நம் குடும்பங்களில் விளங்கவேண்டிய நற்பண்புகளை இன்றைய இரண்டாம் வாசகத்தில் குறிப்பிடுகிறார். அவர் கூறும் அறிவுரைகள் அடையமுடியாத இமயங்கள் அல்ல என்பதை முதலில் நாம் நம்பவேண்டும். அந்த இலக்குகளை இறைவன் துணையோடு நமது குடும்பங்களில் நாம் அடைய முடியும் என்ற நம்பிக்கையோடு அவர் கூறும் அறிவுரைகளுக்கு செவிமடுப்போம்:
கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3: 12-21
12 நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள். எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்.13 ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும்.14 இவையனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்.15 கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயிருங்கள்.16 கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.17 எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.... 18 திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும்.19 திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள்.20 பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும்.21 பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.

தங்களைச்சுற்றி நடந்த அத்தனை அவலங்களையும் மீறி அன்பை, அக்கறையை, ஆதரவை தங்கள் குடும்பத்திலும், தாங்கள் வாழ்ந்த சூழல்களிலும் நிலைநாட்டிய மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு இவர்களை மையப்படுத்தி, இந்தக் குடும்ப விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். இக்குடும்பவிழா வெறும் கொண்டாட்டமாக மட்டும் இராமல், நம் வாழ்வாக மாறி, குடும்ப உணர்வை நம்மிடையே இன்னும் ஆழப்படுத்த இறைவனின் அருளை வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.