2013-12-28 15:35:20

சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டம்


டிச.28,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இச்சனிக்கிழமையன்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுல்தான்பேட்டை மறைமாவட்டம், கோயம்புத்தூர், கோழிக்கோடு ஆகிய இரு மறைமாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தென் மேற்கே அமைந்துள்ள சுல்தான்பேட்டை மறைமாவட்டம், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை உள்ளடக்கி, கோயம்புத்தூர், கோழிக்கோடு ஆகிய இரு மறைமாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.
4,466 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சுல்தான்பேட்டை மறைமாவட்டத்தில் 30,975 கத்தோலிக்கர் உள்ளனர். மேலும், 21 பங்குகளும், 14 மறைமாவட்ட அருள்பணியாளர்களும், 18 துறவற அருள்பணியாளர்களும், 9 அருள்சகோதரர்களும், 102 அருள்சகோதரிகளும், 21 பள்ளிகளும், 12 மருத்துவமனைகள் மற்றும் நலவாழ்வு மையங்களும் இப்புதிய மறைமாவட்டத்தில் உள்ளன.
பாலக்காடு நகரிலுள்ள புனித செபஸ்தியார் ஆலயம், சுல்தான்பேட்டை புதிய மறைமாவட்டத்தின் பேராலயமாக இருக்கும்.
சுல்தான்பேட்டை என்ற புதிய மறைமாவட்டத்துடன் தமிழ்நாட்டில் இலத்தீன் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. இன்னும் 2 சீரோ-மலபார் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களும், ஒரு சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை மறைமாவட்டமும் தமிழ்நாட்டில் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.