2013-12-27 16:22:18

கத்தோலிக்க கல்வி நிறுவனங்களில் மறைப்பணி ஆர்வம் புதுப்பிக்கப்பட வத்திக்கான் அழைப்பு


டிச.27,2013. சமயச்சார்பற்ற கல்வி அமைப்பு அதிகரித்துவரும் இவ்வுலகில் கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் தங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கு, புது எழுச்சியுடன் தங்களை அர்ப்பணிக்குமாறு கேட்டுள்ளது வத்திக்கானின் ஓர் அண்மைய வெளியீடு.
“கத்தோலிக்கப் பள்ளிகளில் பல்வகை கலாச்சார உரையாடலைப் பயிற்றுவித்தல்” என்ற தலைப்பில் ஏடு ஒன்றை வெளியிட்டுப் பேசிய திருப்பீட கத்தோலிக்க கல்வி பேராயத் தலைவர் கர்தினால் Zenon Grocholewski, கல்வி நிறுவனங்களில் கத்தோலிக்கத் தனித்துவம் இன்றியமையாதது என்று கூறினார்.
இக்காலத்தில் கத்தோலிக்கப் பள்ளிகள் எதிர்கொள்ளும் பல சவால்கள் பற்றிக் குறிப்பிட்ட கர்தினால் Grocholewski, பல பெரிய நிறுவனங்கள் புகுத்தும் பாலியல் கருத்துக்கோட்பாடே இன்று கத்தோலிக்கப் பள்ளிகள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று எனவும் குறிப்பிட்டார்.
கத்தோலிக்க கல்வி நிறுவனங்களில் 2008ம் ஆண்டில் ஏறக்குறைய 5 கோடியே 50 இலட்சமாக இருந்த மாணவரின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டில் ஏறக்குறைய 5 கோடியே 80 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் பத்திரிகையாளரிடம் கூறினார் கர்தினால் Grocholewski.
இந்தியாவில் மட்டும் 14,539 கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றுள், 13,004 ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளிகள், 243 சிறப்புப் பள்ளிகள், 448 கல்லூரிகள், மற்றும் 534 தொழில்நுட்பப் பள்ளிகள் ஆகும்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.