2013-12-27 16:22:37

அரசியல் நோக்கத்துக்காக இன விரோதங்கள் பயன்படுத்தப்படுவதற்குத் தென் சூடான் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு


டிச.27,2013. ஐக்கிய நாடுகள் நிறுவனமும், பல வெளிநாடுகளும் தென் சூடானிலிருந்து தங்களின் பணியாளர்களையும் குடிமக்களையும் அகற்றிவரும் இவ்வேளையில் தென் சூடான் கிறிஸ்தவத் தலைவர்கள் அந்நாட்டின் அமைதிக்கும் ஒப்புரவுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
தென் சூடானில் Dinka இனத்தைச் சார்ந்த அரசுத்தலைவர் Salva Kiir ஆதரவாளர்களுக்கும், Nue இனத்தைச் சார்ந்த முன்னாள் உதவி அரசுத்தலைவர் Riek Machar ஆதரவாளர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் கடும் ஆயுதம் தாங்கிய மோதல்களைக் கண்டித்துள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், அரசியல் நோக்கத்துக்காக இன விரோதங்கள் பயன்படுத்தப்படுவதையும் வன்மையாய்க் கண்டித்துள்ளனர்.
மேலும், சூடான் கத்தோலிக்க வானொலியில் பேசிய அந்நாட்டு ஆயர் Erkulano Lodu Tombe, குழப்பங்களை ஏற்படுத்தும் சில அரசியல்வாதிகளின் குரல்களுக்குச் செவிமடுப்பதை விலக்கி நடக்குமாறு உள்ளூர் படைவீரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தென் சூடான் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் ஆயர் Elias Taban, தென் சூடானை முன்னேறவிடாமல் செய்வதற்கு சில துரோகிகள் இன வெறுப்பைத் தூண்டி வருகின்றனர் என எச்சரித்துள்ளார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.